தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் 2026 மே 10-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, 234 தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தேதியை அறிவிக்கவில்லை என்றாலும், மார்ச் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் தீவிரமான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு பணி நடைபெற்றது.

இதன் மூலம் இறந்தவர்கள், இடமாற்றம் செய்தவர்கள், பல இடங்களில் பெயர் இருப்பவர்கள் போன்றவற்றை நீக்கி, புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. டிசம்பர் 19 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி 30 வரை பெயர் சேர்ப்பு, திருத்தம் ஆகியவற்றுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17அன்று வெளியாகிறது. இதன்மூலம் தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியல் மிகத் துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING : தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு... தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
தேர்தல் முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, மாவட்ட அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT-களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் இந்த இயந்திரங்களை ஆய்வு செய்து, தயார் நிலையை உறுதிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வரும் 11 ஆம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வருகை தர உள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதையும் படிங்க: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முழு உருவச் சிலை திறப்பு..! மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்..!