தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பகிரங்கப் பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று நாமக்கல் மாவட்டத்தில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் ஆற்றிய உரையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாகச் சாடினார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகளை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் எதற்கெடுத்தாலும் போட்டோஷூட் நடத்துகிறார்; பத்திரிகைகளில் ஒரு அறிக்கையைத் தருகிறார், உடனே அங்கிருந்து போய்விடுகிறார். நான் பலமுறை சவால் விட்டும், மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்வதில்லை. எதற்கும் பதிலளிக்காத ஒரு பொம்மை முதலமைச்சராகவே அவர் செயல்படுகிறார். ஸ்டாலின் அவர்களே, உங்களுக்குத் தெம்பு, திராணி இருந்தால் நான் கேட்கும் கேள்விகளுக்கு நேருக்கு நேர் பதில் சொல்லுங்கள்" என ஆவேசமாகச் சவால் விடுத்தார்.

பொதுமக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்து பேசிய அவர் திமுக ஆட்சியில் மின் கட்டணம் ஒட்டுமொத்தமாக 67 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது சாமானிய மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் விண்ணைத் தொடும் அளவுக்கு ஏறிவிட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்தத் திராணியற்ற அரசாக இந்த திமுக அரசு உள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் அட்டூழியம் தாங்கவில்லை! விஜய் கட்சியில் இணைந்ததற்கான காரணத்தை விளக்கிய செங்கோட்டையன்!
தனது தலைமையிலான முந்தைய ஆட்சியின் திட்டங்களை பட்டியலிட்ட அவர் அதிமுக ஆட்சியில் மாணவர்களின் நலனுக்காக 7 சட்டக் கல்லூரிகள் தலா 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிக்கொடுக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் ஆசியாவிலேயே பிரம்மாண்டமான தலைவாசல் சர்வதேச கால்நடை பூங்கா எங்களது ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. இந்தியாவிலேயே அதிக தேசிய விருதுகளைப் பெற்ற அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது."
சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசிய அவர், தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் இதனை முழுமையாக ஒழிப்போம் என்றும் உறுதி அளித்தார்.
நாமக்கல் மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தனது உரையை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: கொள்கை இருந்தாலே வெல்ல முடியும்! சீமானின் அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை!