ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பொய் வாக்குறுதிகளைத் தந்து, தற்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணனின் உயிரைப் பறித்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சாடியுள்ளார்.
இதையும் படிங்க: “முருகன் மீது திமுகவுக்கு என்ன கோபம்?” திருப்பரங்குன்றம் தீர்ப்பு குறித்து தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!
சென்னை டிபிஐ வளாகத்தில் பணி நிரந்தரம் கோரிப் போராடி வந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன், விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்தச் சோகமான சூழலிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாக்களில் கவிதை பாடச் சொல்லிக் கொண்டாடிக்கொண்டிருப்பதாக எடப்பாடியார் கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு ஆசிரியரின் மரணத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் அரசு செயல்படுவது, இந்த ‘ஃபெய்லியர் மாடல்’ அரசுக்கு ஒரு இழுக்கு என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளால் பணி நிரந்தரம் ஆகிவிடும் எனும் நம்பிக்கையில் காத்திருந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன், ஏமாற்றத்தினால் விஷம் அருந்தி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக ஆசிரியர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், ஆசிரியர் ஒருவர் மரணித்துவிட்ட கவலை கொஞ்சம் கூட இல்லாமல், முதல்வர் என்ற உயர் பதவியில் இருந்து கொண்டு கவிதை பாடச் சொல்லி 'வைப்' (Vibe) செய்து கொண்டிருப்பது வெட்கக்கேடானது என முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார். உயிரிழந்த கண்ணனின் குடும்பத்திற்குத் திமுக அரசு உடனடியாக ரூ.50 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இதுபோன்ற தற்கொலை முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பொய் வாக்குறுதிகளால் மக்கள் சலிப்பு! திமுக அரசை எக்ஸ் தளத்தில் விமர்சித்த அமித்ஷா!