தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் விருப்பமனு விநியோகம் திமுகவில் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், தற்போதைய திமுக வர்த்தக அணி மாநிலத் துணைச் செயலாளருமான பி.டி. செல்வகுமார் இன்று அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தார். கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கோரிய அவர், செய்தியாளர் சந்திப்பில் தனது முன்னாள் பாஸ் (Boss) விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் 'கலப்பை மக்கள் இயக்கம்' சார்பில் நான் ஏராளமான நற்பணிகளைச் செய்துள்ளேன். அங்குள்ள மக்களின் முழு ஆதரவு எனக்கு இருப்பதால், திமுக தலைமை வாய்ப்பளித்தால் நிச்சயம் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஒரு சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவர். அவருக்குக் கஷ்டப்படுவது பிடிக்காது. 15 நாட்களுக்கு ஒருமுறை தனி விமானத்தில் வந்து, கேரவனில் அமர்ந்துகொண்டு, வெறும் 10 நிமிடம் மட்டும் பேசிவிட்டுச் செல்வது அரசியல் ஆகாது. தேர்தல் களம் என்பது மக்களைத் தினமும் நேரில் சந்திப்பது; ஆனால் விஜய்க்குத் தோல்வியைத் தாங்கும் வலிமை இல்லை எனச் சாடினார்.
இதையும் படிங்க: 'ஜனநாயகம்' பட சென்சார் வழக்கு: வாபஸ் பெற நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த KVN புரொடக்ஷன்ஸ்!
தவெக-வில் விருப்பமனு வாங்கினால் விஜய்யுடன் புகைப்படம் எடுக்கலாம், பேசலாம் எனப் பொய் ஆசைகளைத் தூண்டி நிர்வாகிகளை ஏமாற்றி அதிகளவில் மனுக்களை வாங்க வைப்பதாகக் குற்றம் சாட்டினார்.
திமுக தலைமை உத்தரவிட்டால், விஜய்யை எதிர்த்துப் போட்டியிட நான் தயார். அவரை எதிர்த்து எவ்வாறு பிரச்சாரம் செய்ய வேண்டும், அவரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்கிற வித்தைகளும், வியூகங்களும் எனக்கு நன்றாகத் தெரியும். அவரை வீழ்த்தி நிச்சயம் வெற்றி பெறுவேன் எனப் பகிரங்க அறைகூவல் விடுத்தார்.
விஜய்யின் நிழலாக நீண்ட காலம் இருந்த பி.டி. செல்வகுமார், இப்போது அவருக்கு எதிராகவே அரசியல் களத்தில் வரிந்துகட்டிக்கொண்டு நிற்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விஜய்யின் பலவீனம் மற்றும் பலம் என அனைத்தையும் அறிந்தவர் என்பதால், செல்வகுமாரின் இந்தப் பேச்சு தவெக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விஜய்யை இனிமேல்தான் விமர்சிப்பேன்! அண்ணாமலை எச்சரிக்கை!