மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட முன்னாள் மாநிலச் செயலாளர் மல்லை சத்யா, வரும் நவம்பர் 20-ம் தேதி சென்னையில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது உருவான மக்கள் நலக் கூட்டணி குறித்து “பல ரகசியங்கள் உள்ளன, இப்போது சொல்ல முடியாது” என்று அவர் பரபரப்பாக தெரிவித்துள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கட்சித் தலைமையை விமர்சித்து வந்த மல்லை சத்யா, தனித்து செயல்பட்டார். இதனால் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி, முதலில் இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த மதிமுக பொதுச்செயலர் வைகோ, அவரை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டார்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லை சத்யா பேசுகையில், “திராவிட இயக்கக் கருத்தியலில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்.
இதையும் படிங்க: திமுக ஆதரவு எங்களுக்குத்தான்! மதிமுகவை நினைச்சு வருத்தம்! ட்விஸ்ட் வைத்த மல்லை சத்யா
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது உருவான மக்கள் நலக் கூட்டணியில் பல ரகசியங்கள் உள்ளன. அதை இப்போது சொல்ல முடியாது. நவம்பர் 20-ம் தேதி சென்னை அடையாறில் புதிய கட்சியைத் தொடங்குகிறேன். கட்சியின் பெயரைத் தீர்மானிக்க புலவர் செவந்தியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மல்லை சத்யா, மதிமுகவில் மாநிலச் செயலாளர், மத்திய மாவட்டச் செயலாளர், தலைமைக் கழக உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால், அவருக்கு சீட் மறுக்கப்பட்டதால், கட்சித் தலைமை மீது அதிருப்தி கொண்டிருந்தார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதிமுகவில் இருந்து வெளியேறிய மல்லை சத்யா, தனது ஆதரவாளர்களுடன் தனிக்கட்சி தொடங்குவது தமிழக அரசியலில் புதிய அலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016-ல் வைகோ தலைமையில் உருவான மக்கள் நலக் கூட்டணி (தேமுதிக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமாகா) பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அந்தக் கூட்டணி உருவானதில் “ரகசியங்கள் உள்ளன” என்ற மல்லை சத்யாவின் கருத்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதிமுக தரப்பில் இதுவரை எந்தப் பதிலும் வெளியிடப்படவில்லை. மல்லை சத்யாவின் புதிய கட்சி, திராவிடக் கருத்தியலை மையப்படுத்தியதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவும் - பாஜகவும் மிரட்டுறாங்க!! தேர்தல் கமிஷன் பார்த்துக்கோங்க!! - தவெக பாயிண்ட்!