பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் - தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்ட நாளாக நிலவி வரும் மோதல் இப்போது வெளிப்படையான போராட்ட மோதலாக வெடித்துள்ளது. ஒரே கோரிக்கையான “வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு” என்ற கோரிக்கையை வலியுறுத்தி இருவரும் தனித்தனியாக போராட்டங்கள் அறிவித்துள்ளனர். இதனால் கட்சி நிர்வாகிகளும், வன்னியர் சங்க நிர்வாகிகளும் எந்தப் போராட்டத்திற்குச் செல்வது என்ற தர்மசங்கடத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் 100 நாட்கள் நடைபயணத்தை வெற்றிகரமாக முடித்த அன்புமணி ராமதாஸ், வரும் டிசம்பர் 17-ஆம் தேதி மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். அதற்கு முன்னோட்டமாக மாவட்ட வாரியாக பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கு மறுபக்கம், நிறுவனர் ராமதாஸ் டிசம்பர் 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஒரே நாளில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். “தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் இருக்கும்” என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: நான்தான் தலைவர்!! அன்புமணி கிடையாது!! தேர்தல் கமிஷன் நடவடிக்கையால் கொந்தளிக்கும் ராமதாஸ்!
இரு தரப்பும் ஒரே கோரிக்கைக்காக, ஒரே மாதத்தில், ஐந்தே நாள் இடைவெளியில் தனித்தனி போராட்டங்களை அறிவித்திருப்பது கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி தரப்பினர் “ராமதாஸ் அறிவித்துள்ள ஆர்ப்பாட்டம் பெயரளவிலானது, அதனால் வன்னியர்களுக்கு எந்தப் பயனும் இல்லை, அதற்குச் செல்ல வேண்டாம்” என்று கட்சியினரையும் வன்னியர் சங்க நிர்வாகிகளையும் தூண்டி வருகின்றனர். அதே நேரத்தில் ராமதாஸ் தரப்பினர் “அன்புமணியின் சிறை நிரப்பும் போராட்டத்திற்குச் சென்றால் சிறைக்குப் போக வேண்டியிருக்கும், குடும்பத்தை கவனிக்க முடியாது” என்று எச்சரித்து வருகின்றனர்.

இரு தரப்பும் தனித்தனியாக வாட்ஸ்அப் குழுக்கள், தொலைபேசி அழைப்புகள் மூலம் நிர்வாகிகளைத் தங்கள் போராட்டத்திற்கு அழைத்து வருவதால், மாவட்டம் தோறும் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
“எந்தப் போராட்டத்திற்குச் சென்றால் கட்சியில் நிலைத்து நிற்க முடியும்?” என்ற கேள்வி அவர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது. சில மாவட்டங்களில் “இரண்டு போராட்டத்திற்கும் செல்வோம்” என்று முடிவு செய்திருந்தாலும், பெரும்பாலான இடங்களில் நிர்வாகிகள் மௌனமாக இருப்பதே நிலவரமாக உள்ளது.
பா.ம.க.வில் கடந்த சில ஆண்டுகளாகவே அப்பா-மகன் இடையே அதிகார மோதல் வெளிப்படையாகத் தெரிந்தாலும், இப்போது போராட்டக் களம்வரை அது பரவியிருப்பது கட்சியின் ஒற்றுமைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. வன்னியர் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்ற உணர்வு சமூகத்தில் இருந்தாலும், இரு தலைவர்களும் தனித்தனி போராட்டம் நடத்துவதால், அந்தக் கோரிக்கையின் தீவிரம் குறைந்துவிடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ம.க.வின் இந்த உள் மோதல் கட்சியின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். “ஒரே குடும்பத்தில் இருந்து இரண்டு தலைவர்கள், ஒரே கோரிக்கைக்காக இரண்டு போராட்டங்கள்” என்ற நிலை தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மகளை களமிறக்க ராமதாஸ் மாஸ்டர் ப்ளான்!! தருமபுரியில் போட்டி! திமுக கூட்டணிக்கு தூது! அன்புமணி அப்செட்!