அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்புகளை வகித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கலைராஜன், தற்போது புதிய அரசியல் பயணமாக தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்ற அவர், உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டார்.
தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் 2006 மற்றும் 2011 தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு இரு முறை வெற்றி பெற்றவர் என்ற சிறப்பு கலைராஜனுக்கு உண்டு. அக்காலத்தில் அவர் கட்சியின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அமைப்பு ரீதியான முக்கியப் பதவிகளையும் வகித்தார். அதிமுக பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற “பூமி உள்ளவரை எங்க அம்மா புகழே நிலைத்திருக்கும்” என்ற புகழ்பெற்ற பாடலை எழுதியவராகவும் அவர் அறியப்படுகிறார். அந்த பாடல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழை உயர்த்திப் பேசும் வகையில் உருவானதுடன், இன்றளவும் அதிமுக தொண்டர்களிடையே நினைவுகூரப்படுகிறது.
அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரிவுகளுக்குப் பிறகு, அவர் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அங்கு சில காலம் செயல்பட்ட பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். திமுகவில் இலக்கிய அணி செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
இதையும் படிங்க: தவம் இருந்தாலும் தவெக-வில் அனிதாவுக்கு இடமில்லை! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!

2021 சட்டமன்றத் தேர்தலில் தியாகராய நகர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்துக்கு மரியாதை நிமித்தமாக அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் கலைராஜனின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. 2026 தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நம்பியிருந்த நிலையில் அதுவும் உறுதியாகாததால் அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
தனக்கு உரிய அங்கீகாரம் மற்றும் முக்கிய பொறுப்புகள் திமுகவில் கிடைக்கவில்லை என்ற மனவருத்தம் நீண்ட நாட்களாக இருந்த நிலையில், அவர் புதிய அரசியல் தளத்தை தேர்வு செய்ய முடிவு செய்தார். அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் தலைமைத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
சென்னையின் தென் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் செல்வாக்கு கொண்டவராக கருதப்படும் கலைராஜனின் இணைப்பு, தவெகவுக்கு அமைப்புரீதியான பலத்தை வழங்கும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இலக்கிய மற்றும் தேர்தல் அனுபவம் கொண்ட அவரது வருகை, கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்களுக்கு கூடுதல் வலுசேர்க்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த இணைப்பு சென்னை அரசியல் சூழலில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: தவெக-வை கணிக்க தவறிட்டோம்... அதான் அவங்க ஆட்சியில் இருக்காங்க! இபிஎஸ் ஓபன் டாக்!