ஈரோடு: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி (தமாகா) தலைவர் ஜி.கே. வாசன் இன்று ஈரோட்டில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பல முக்கிய விவகாரங்களில் தனது கருத்துகளைத் தெரிவித்தார்.
நார்வேயில் சதுரங்க உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய வீரர் பிரக்யானந்தாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த வாசன், புதிதாக அரசியல் இயக்கம் தொடங்கியுள்ள அண்ணாமலைக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை தொடர்வதாகச் சுட்டிக்காட்டிய அவர், “கடந்த ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். குற்றவாளிகள் அச்சப்படும் வகையில் தண்டனை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக பாலியல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்பது தமாகாவின் உறுதியான நிலைப்பாடு” என்றார்.
இதையும் படிங்க: 5 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 13 பேர் 15 நாளில் 'சஸ்பெண்ட்'!! விஜய் பக்கா ஸ்கெட்ச்! களை எடுக்கும் பணியில் தவெக தீவிரம்
விவசாயிகள் விவகாரத்தில் அரசு நம்பிக்கை இழந்து வருவதாக விமர்சித்த வாசன், “ஆட்சி பொறுப்பேற்றபோது விவசாயிகளின் நம்பிக்கையைப் பெற்றிருந்த அரசு, முழுமையான கடன் தள்ளுபடி செய்யாததால் அவர்களின் ஆதரவை இழந்துள்ளது. விவசாயம் சார்ந்த அரசாக செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் பிடிவாதத்தைச் சுட்டிக்காட்டிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் கடுமையாகப் பேச வேண்டும். தமிழக முதல்வர் கர்நாடக முதல்வரை தட்டிக் கேட்க வேண்டும்” என்றார்.
மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு விவகாரம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறிய வாசன், அரசு உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். கே.என்.நேரு மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது குறித்து, “சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்” என்றார்.
தேர்தல் கூட்டணி குறித்து பேசிய அவர், “தேர்தலுக்கு முன் கூட்டணி, தேர்தலுக்குப் பின் நட்பு கட்சியாகத் தொடர்கிறது. வாக்காளர்களை சாதாரணமாக எடை போடக்கூடாது” என்றார். தமாகா கட்சியை வலுப்படுத்த வரும் 14-ம் தேதி சென்னையில் முக்கிய கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
பேட்டியின்போது மாநில பொதுச் செயலாளர் யுவராஜா, மாநில துணைத் தலைவர் விடியல் சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: முக்கிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தும் முதல்வர் விஜய்! நேரடியாக கண்காணிக்கவும் முடிவு!