இந்தியாவின் மிக முக்கிய மற்றும் உத்திசார் பாதுகாப்பு உள்கட்டமைப்பாகக் கருதப்படும் ஏவுகணைத் தயாரிப்புத் துறையில், அதானி, டாடா, மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி உள்நாட்டுத் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மிக முக்கியமான கொள்கை முடிவை எடுத்துள்ளது.
இந்தியாவில் இதுவரை ஏவுகணைத் தயாரிப்பு என்பது பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) போன்ற அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்தது. இந்நிலையில், பாதுகாப்புப் படைகளின் உள்நாட்டுத் தேவைகள் அதிகரித்து வருவதாலும், நட்பு நாடுகளுக்கான ராணுவத் தளவாட ஏற்றுமதி தேவைகள் பல மடங்கு உயர்ந்துள்ளதாலும், இந்தத் துறையைத் தனியார் நிறுவனங்களுக்கும் திறந்துவிட மத்திய அரசு தற்பொழுது தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கியுள்ள 'அஸ்ட்ரா மார்க் 2' (Astra Mark 2) ஏவுகணைகளைத் தயாரிப்பதற்காக, முன்னணித் தனியார் கூட்டு நிறுவனங்களுக்கு விரைவில் அதிகாரப்பூர்வ விருப்பக் கோரிக்கை (RFP) விடுக்கப்பட உள்ளது.

இந்த அதிரடிப் கொள்கை மாற்றத்தில் அதானி டிஃபென்ஸ், டாடா குழுமம், மஹிந்திரா டிஃபென்ஸ், பாரத் ஃபோர்ஜ் மற்றும் ஐகாம் (ICOMM) ஆகிய பெருநிறுவனங்கள் ஏவுகணைத் தயாரிப்புப் போட்டியில் களம் இறங்கவுள்ளதாகத் பாதுகாப்புத் துறை புள்ளிவிவர விபரங்கள் தெரிவிக்கின்றன. வானில் இருந்து வான் இலக்குகளைத் தாக்கும் 'அஸ்ட்ரா மார்க் 2' ஏவுகணையானது 180 முதல் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எதிரி நாட்டுப் போர் விமானங்களை மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இலகுரகப் போர் விமானமான தேஜஸ் மார்க் 1-ஏ, சுகோய்-30 எம்கேஐ மற்றும் ரஃபேல் மெரைன் போன்ற அதிநவீனப் போர் விமானங்களில் இந்த ஏவுகணைகள் இணைக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: 70 லட்சம் ஏழைகளை வறுமைக்கு தள்ளாதீங்க! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!
குறிப்பாக, அண்மையில் தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, இந்தியாவிடமிருந்து இந்த அஸ்ட்ரா ஏவுகணைகளையும் பிரம்மோஸ் ஏவுகணைகளையும் வாங்குவதற்காக சுமார் 630 மில்லியன் டாலர் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்கப் பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் போட்டிருந்தது. அரசு பொதுத்துறை நிறுவனங்களால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இவ்வளவு பெரிய அளவிலான ஏற்றுமதி ஆர்டர்களையும், இந்திய ராணுவத்தின் தேவைகளையும் ஒரே நேரத்தில் தயாரித்து வழங்க முடியாத உள்கட்டமைப்புச் சூழல் நிலவுகிறது. இந்தத் தயாரிப்புத் தொய்வைத் தவிர்த்து, நாட்டின் ஏவுகணை உற்பத்தித் திறனைப் பலமடங்கு அசுர வேகத்தில் பெருக்குவதற்காகவே மோடி அரசு இந்தத் தனியார்மயமாக்கல் முடிவை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: 15 நாள் தான் டைம்..!! பைரசி மீது நடவடிக்கை.. டெலிகிராமுக்கு மத்திய அரசு நோட்டீஸ்..!!