சென்னை: ஐரோப்பிய நாடான நெதர்லாந்தைச் சேர்ந்த ‘ஓஷன்வைட் எக்ஸ்பெடிஷன்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான ஆடம்பர சொகுசு கப்பல் ‘எம்.வி. ஹோண்டியஸ்’ ஹண்டா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கப்பலில் பணியாற்றும் இரு இந்தியர்களும் தொற்று அபாயத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி அர்ஜென்டினாவின் உஷுவாயா துறைமுகத்திலிருந்து பயணத்தைத் தொடங்கிய இந்தக் கப்பல், நாளை ஸ்பெயினின் கேனரி தீவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கப்பலில் பயணித்த பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில், எலிகள் மூலம் பரவும் ஹண்டா வைரஸ் என உறுதி செய்யப்பட்டது. இதுவரை ஐந்து பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பெண் உயிரிழந்துள்ளனர்.
கப்பலில் பணியாற்றும் இரு இந்தியர்களுக்கு தொற்று அபாயம் இருப்பதால் அவர்களை சுகாதார அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். கப்பலில் இருந்த 40 பயணியர்கள் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள செயின்ட் ஹெலினா தீவில் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகமே பேரதிர்ச்சி...!! - தவெக நிர்வாகி தீக்குளிப்பு... விஜய் ஆட்சி அமைக்காத முடியாத விரக்தியில் விபரீதம்...!

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், “எலிகளின் சிறுநீர், எச்சம் மூலம் காற்றில் பரவும் இந்த வைரஸ் பொதுவாக மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுவது அரிது. தற்போதைய சம்பவம் தீவிரமானதாக இருந்தாலும் உலகளாவிய பொது சுகாதார அபாயம் குறைவு” எனத் தெரிவித்தார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) தெரிவித்துள்ளதாவது: “கப்பலில் உள்ள இரு இந்தியர்களுக்கு தொற்று உறுதியானாலும், இது தனிநபர் சார்ந்த விவகாரம். இந்தியாவுக்கு தொற்று பரவும் அபாயம் தற்போதைக்கு இல்லை” என உறுதியளித்துள்ளது.
இந்தச் சம்பவம் சர்வதேச சுகாதார வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. கப்பல் பயணிகள் மற்றும் ஊழியர்களின் தொடர்புகளை கண்டறிந்து கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவு கொடுக்கணும்..! கையை அறுத்துக் கொண்ட விசிக தொண்டர்..! பரபரப்பு..!