சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளை மீறி கட்டப்பட்ட பங்களாக்கள், ரிசார்ட்கள் மற்றும் விடுதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான வழக்குகள் மீண்டும் உயர் நீதிமன்ற கவனத்துக்கு வந்துள்ளன.
நீலாங்கரை முதல் உத்தண்டி வரை உள்ள பகுதியில் கடற்கரையிலிருந்து 500 மீட்டருக்குள் விதிமீறலாக கட்டடங்கள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி 798 கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உள்ளிட்ட பிரபலங்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் ஆகியோரும் அடங்கியுள்ளனர். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்குகள் நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் எம். சுதீர்குமார் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
இதையும் படிங்க: இப்போ என்ன பதில் சொல்லப்போறீங்க ஸ்டாலின்?! அமலாக்கத்துறை வளையத்தில் கே.என்.நேரு!! அண்ணாமலை விளாசல்!

அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது: 798 உரிமையாளர்களில் 440 பேர் மாநகராட்சி நோட்டீசை எதிர்த்து அரசிடம் மேல்முறையீடு செய்துள்ளனர். இதில் 84 மேல்முறையீடுகள் முடிவுக்கு வந்துவிட்டன. மீதமுள்ளவை நிலுவையில் உள்ளன. இதைக் கேட்ட நீதிபதிகள், மீதமுள்ள மேல்முறையீட்டு மனுக்களுக்கு கட்டட உரிமையாளர்கள் தரப்பு விளக்கம் அளிக்க மார்ச் 30 வரை கால அவகாசம் வழங்கினர்.
பின்னர், தனிப்பட்ட விசாரணை நடத்தி, அனைத்து மேல்முறையீடுகளையும் வரும் மே 31ஆம் தேதிக்குள் முடித்து முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். விசாரணையை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், சென்னையின் நீண்ட கடற்கரை பகுதியில் அரிய வகை ஆமைகள் இனப்பெருக்கம் செய்வதால் சுற்றுச்சூழலை காக்க வேண்டியது அவசியம் எனக் கூறினார். உத்தண்டிக்கு அப்பால் உள்ள சட்டவிரோத கட்டடங்கள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த உத்தரவு ECR பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விதிமீறல் கட்டடங்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் சம்பந்தப்பட்ட இந்த விவகாரம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: மறுதணிக்கைக்கு சென்ற ஜனநாயகன்! கோர்ட் கொடுத்த அனுமதி! விஜய் ரசிகர்களுக்கு சற்றே ஆறுதல்!