திருவாரூர் அருகே காரியாங்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் சமையல் பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 14ம் தேதி காலை உணவை சமைப்பதற்காக, சமையல் ஊழியர்கள் அங்கு சென்றபோது, சமையலறையில் இருந்த பொருட்கள் உடைத்து நொறுக்கப்பட்டும், மளிகை பொருட்கள் சிதறி கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்தபோது, அங்கு மாணவர்கள் குடிநீர் அருந்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி உடைக்கப்பட்டு இருந்ததோடு, அந்த தொட்டிக்குள் மனித கழிவு கொட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டு, தென்னை மரங்களில் இருந்த தேங்காய்கள் பறிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இந்த செயலில் ஈடுபட்டவர்கள் பள்ளி வளாகத்தில் சிக்கன் சமைத்து சாப்பிட்டு விட்டு, மீதம் உள்ள பொருட்களை அங்கேயே போட்டு விட்டு சென்று இருப்பதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: அடுத்த வேங்கைவயல் சம்பவம்.. திருவாரூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..! கொந்தளிப்பில் மக்கள்..!
பின்னர் ஊழியர்கள் உடனடியாக பள்ளி தலைமையாசிரியருக்கு தகவல் கொடுக்க, அவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பள்ளியில் மலம் கலந்த குடிநீர் தொட்டி, சேதப்படுத்தப்பட்ட சமையல் பொருட்களையும் பார்வையிட்டு, ஊழியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) அன்புச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
குடிநீர் தொட்டில் மலம் கலந்த விவகாரம் அறிந்த கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டு, குடிநீரில் மலம் கலந்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து திருவாரூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் திருவாரூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த விஜயராஜ் (வயது36), செந்தில்(39), காளிதாஸ்(27) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் 3 பேரும் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து மது அருந்தியுள்ளனர்.
மேலும் சத்துணவு மையத்துக்குள் இருந்த பொருட்களை சேதப்படுத்தி, அங்கு அடுப்பு வைத்து அசைவ உணவினை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதில் போதை தலைக்கு ஏறிய நிலையில் இயற்கை உபாதை ஏற்பட்டு தண்ணீருக்காக குடிநீர் தொட்டியை உடைத்து அதில் இருந்த தண்ணீரை பயன்படுத்திய போது தண்ணீரில் மனித கழிவு கலந்து உள்ளது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு.. அழிச்சாட்டிய ஆட்சி.. நயினார் ஆவேசம்..!