தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து திமுக, காங்கிரஸ், த.வெ.க. தலைவர் விஜய் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை கூறியதாவது: "மத்திய பட்ஜெட் யாரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் பெரிதாகிக் கொண்டே போகிறது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இது அமைந்துள்ளது.
உட்கட்டமைப்பு, பெண்களுக்கான விடுதிகள், விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எல்லா மாநிலங்களுக்கும் பயன் தரும் வகையில் நல்ல பட்ஜெட் கொடுத்துள்ளோம். தமிழ்நாடு அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்."
இதையும் படிங்க: எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!
திமுகவை கடுமையாக சாடிய அண்ணாமலை, "அண்ணாவின் ஆட்சிக்கும் இன்றைய திமுக ஆட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அண்ணாவின் குடும்பத்தினர் இன்று எப்படி இருக்கின்றனர் என்று யாருக்காவது தெரியுமா? அண்ணாவின் குடும்பம் அரசியல் பக்கமே வருவதில்லை.
அண்ணா என்கிற பசு மாட்டின் மீது நிற்கும் காக்கா தான் இப்போதைய திமுக ஆட்சி. திமுக மீதான வெறுப்பு திராவிட சித்தாந்தத்துக்கு எதிராக மாறி வருகிறது. ஒவ்வொரு திமுக அமைச்சரையும் ஒரு அறையில் சாத்திவிட்டு அண்ணாவைப் பற்றி 10 கருத்துகள் எழுத சொன்னால் யாருக்கும் எழுதத் தெரியாது."

காங்கிரஸை விமர்சித்து அவர் கூறினார்: "கட்சியில் இருந்து ஒருவரை சஸ்பெண்ட் செய்ய முடியாமல் காங்கிரஸ் கமிட்டி தலைவர் இருக்கிறார். காங்கிரஸ் அடிமைக் கட்சியாக உள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி. ஸ்டாலின் என்ன சொன்னாலும் தேசிய ஜனநாயக கூட்டணி 'கெட் இன்' தான்."
விஜய்யைப் பற்றி பேசிய அண்ணாமலை, "விஜய்யை நான் தேவையில்லாமல் குற்றம் சொல்ல விரும்பவில்லை. எங்களிடம் டபுள் என்ஜின் இருக்கிறது. விஜய்யிடம் என்ஜினே இல்லை. விஜய்யிடம் வண்டி, பெட்ரோல், டீசல், வண்டியை இயக்க யாரிடமும் இல்லை. 234 தொகுதிகளில் விஜய்யால் வேட்பாளர்களை நியமிக்க முடியுமா?" என்றார்.
இந்த பேச்சு திமுக தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக-திமுக இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. அண்ணாமலையின் விமர்சனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுக தரப்பில் இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வேளச்சேரியில் பறக்கும் விசில் சப்தம்! விஜய் குஷி!! மு.க.ஸ்டாலின், எடப்பாடிக்கு ஷாக்!