நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், வீட்டு உபயோக சிலிண்டர்களும் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் பரவலாகி உள்ளது. வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வீட்டு சிலிண்டர்களும் இதே நிலைக்கு தள்ளப்பட்டால் என்ன செய்வது என்ற பதற்றத்தில் மக்கள் உள்ளனர். இதனால், பலர் முன்கூட்டியே கூடுதல் சிலிண்டர்களை பதிவு செய்து வைத்துக்கொள்ளும் எண்ணத்தில் அதிக அளவில் புக்கிங் செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதன் விளைவாக, சிலிண்டர் முன்பதிவுக்கான அழைப்புகள் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளன. இண்டேன் (Indane) நிறுவனத்தின் கேஸ் புக்கிங் அமைப்பு இந்த திடீர் சுமை காரணமாக முழுமையாகச் செயலிழந்து விட்டது. வழக்கமான அளவை விட 8 முதல் 10 மடங்கு வரை அழைப்புகள் அதிகரித்ததால், ஐவிஆர்எஸ் (IVRS) மற்றும் மிஸ்டு கால் முறைகள் கிராஷ் ஆகிவிட்டதாக இண்டேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கேஸ் சிலிண்டர் ரீஃபில் புக்கிங்கில் சிக்கல்..!! வொர்க் ஆகாத நம்பர்..!! ஏஜென்சிகளுக்கு படையெடுக்கும் மக்கள்..!!
இது தொடர்பாக அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், "எதிர்பாராத சவாலான சூழலை நாம் எதிர்கொண்டுள்ளோம். ஐவிஆர்எஸ் மற்றும் மிஸ்டு கால் எண்களுக்கு வரும் அழைப்புகள் பத்து மடங்கு அதிகரித்துள்ளன. இதனால் அமைப்பு முழுமையாக சுமை ஏற்பட்டு செயலிழந்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல வாடிக்கையாளர்கள் வழக்கமான தொலைபேசி எண்கள் வேலை செய்யவில்லை என தொடர்ந்து புகார் அளித்ததைத் தொடர்ந்து, இண்டேன் நிறுவனம் மாற்று வழிமுறைகளை அறிவித்துள்ளது. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து WhatsApp-இல் 75888 88824 என்ற எண்ணுக்கு 'REFILL' என்று டைப் செய்து அனுப்பினால், உடனடியாக சிலிண்டர் முன்பதிவு செய்யப்படும். மாற்றாக, Indian Oil One என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் கஸ்டமர் எண்ணை உள்ளிட்டு எளிதாக பதிவு செய்யலாம்.வழக்கமான முறைகள் இயங்காதபோது, 77189 55555 என்ற எண்ணுக்கு உங்கள் வாடிக்கையாளர் எண் மற்றும் ஏஜென்சி விவரங்களுடன் எஸ்எம்எஸ் அனுப்பலாம்.
அல்லது 84549 55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். இந்த வசதிகள் தற்காலிகமாக சுமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும், படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், எந்த வழியிலும் பதிவு செய்ய முடியாவிட்டால், நேரடியாக அருகிலுள்ள கேஸ் புக்கிங் அலுவலகத்திற்கு சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பதிவு செய்தும் சிலிண்டர் வந்து சேரவில்லை எனக் கூறி பலர் நேரடியாக விநியோக மையங்களுக்கு குவிந்து வருகின்றனர். இது விநியோகஸ்தர்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் பில் கையில் வைத்துக்கொண்டு "வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டாம், நாங்களே டெலிவரி செய்கிறோம்" எனக் கோரி வருகின்றனர்.
இந்த நெருக்கடி மத்திய கிழக்கு போர் காரணமாக ஏற்பட்ட இறக்குமதி பிரச்சினைகளால் உருவாகியுள்ளது. அரசு உள்நாட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை அளித்து வருவதால், வணிகத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு பெரிய அளவில் தட்டுப்பாடு இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பீதி அடையாமல், அவசரப்படாமல் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திக்.. திக்...!! - மெல்ல, மெல்ல ஸ்தம்பிக்கும் தமிழகம்... நாளை முதல் இவையெல்லாம் இயங்க வாய்ப்பே கிடையாது...!