நாட்டின் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2026 ஏப்ரல் முதல் 2027 பிப்ரவரி வரை இரு கட்டங்களாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், பல காலமாகப் பேசப்பட்டு வந்த, ஜாதி கணக்கெடுப்பும் 2027 ஆம் ஆண்டு நடைபெறும் மெகா கணக்கெடுப்பின் போது எடுக்கப்படும் என்ற பரபரப்பு தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளிக்கையில் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார். அமைச்சரின் அறிக்கைப்படி, இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது இரு கட்ட நடவடிக்கையாக இருக்கும். முதல் கட்டமாக, 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் வசதிக்கு ஏற்ப 30 நாட்களுக்குள் வீடுகளின் பட்டியல் கணக்கெடுக்கப்படும். 
இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பிப்ரவரி 2027-இல் நடைபெறும். இந்த இரண்டாம் கட்டக் கணக்கெடுப்பின் போதுதான், அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மிக முக்கியமான அம்சமாகக் கருதப்படும் ஜாதி கணக்கெடுப்பும் எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 30 அன்று கூடிய அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் முடிவு செய்யப்பட்டவாறே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் நாளே அமளி! 'எஸ்ஐஆர்' விவகாரத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
சமூக நீதிக் கொள்கைகளுக்குப் பெரும் திருப்புமுனையாக அமையக்கூடிய இந்த ஜாதி கணக்கெடுப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, நாட்டில் பெரும் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று நிர்வாக மையம் கருதுகிறது. திட்டமிடல் மற்றும் வள ஒதுக்கீட்டிற்குப் பயன்படும் இந்த மெகா கணக்கெடுப்பின் முழு கால அட்டவணையையும் மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பங்குச் சந்தை கட்டுப்பாடுகளில் பெரிய மாற்றம்? SEBI தலைவர் துஹின் காந்தா பாண்டே தகவல்!