இந்தியாவும் நியூசிலாந்தும் இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA) பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதனை அறிவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
நியூசிலாந்து பிரதமர் லக்ஸன் தனது எக்ஸ் தளப் பதிவில் இதுகுறித்து விரிவாகக் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரியை 95 சதவீதம் வரை குறைக்கவோ அல்லது முழுமையாக நீக்கவோ வழிவகை செய்கிறது.
இதனால் அடுத்த 20 ஆண்டுகளில் நியூசிலாந்தின் ஏற்றுமதி மதிப்பு ஆண்டுக்கு 1.1 பில்லியன் டாலரில் இருந்து 1.3 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முதலமைச்சருடன் திமுக தேர்தல் அறிக்கை குழு முக்கிய சந்திப்பு... அந்த லிஸ்ட் கொடுத்துட்டாங்களாம்...!
இந்த வர்த்தக ஒப்பந்தம் நியூசிலாந்தில் வேலைவாய்ப்புகள், ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் என்று லக்ஸன் தெரிவித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவை இது மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று சுட்டிக்காட்டிய லக்ஸன், இந்த ஒப்பந்தம் நியூசிலாந்து வணிகங்களுக்கு 1.4 பில்லியன் இந்திய நுகர்வோரை அணுகும் வாய்ப்பை உருவாக்கும் என்றார்.

இதுபோன்ற புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் முன்னேற்றத்துக்கும் உதவும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்தி எதிர்காலத்தை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகள் 2025 மார்ச் மாதம் தொடங்கி ஒன்பது மாதங்களில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை பெருமளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு இது 2025-ஆம் ஆண்டில் மூன்றாவது தடையில்லா வர்த்தக ஒப்பந்தமாகும்.
இரு நாட்டுத் தலைவர்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கவும், அடுத்த 15 ஆண்டுகளில் நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு 20 பில்லியன் டாலர் முதலீடு செய்யவும் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'அபயஹஸ்தம்'? தெலுங்கானா தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? சோனியா காந்திக்கு மத்திய அமைச்சர் கேள்வி!