முறைப்படுத்தப்படாத ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி, வரும் மே 20-ம் தேதி நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. சுமார் 12.4 லட்சம் மருந்தகங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் என அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு மருந்து விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனை தொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நோயாளிகளின் உயிர் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் முறையான மேற்பார்வையின்றி, சரிபார்ப்பு இல்லாமல் மருந்துகள் விற்கப்படுவதால், ஒரே மருந்துச் சீட்டை பலரும் பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக ஆண்டிபயாடிக் மருந்துகள் மற்றும் போதைப் பொருட்கள் கொண்ட மருந்துகள் எளிதில் கிடைப்பது, மருந்து எதிர்ப்புத் திறன் (Antimicrobial Resistance - AMR) அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது.

இது எதிர்காலத்தில் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு பெரும் சவாலாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி மருந்துச் சீட்டுகள் உருவாக்கப்பட்டு மருந்துகள் விற்கப்படுவதும் கவலையளிக்கும் விஷயமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் அவசரத் தேவை கருதி அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிகத் தளர்வுகளை ஆன்லைன் நிறுவனங்கள் தொடர்ந்து பயன்படுத்தி, மருந்து விதிமுறைகளை மீறி வருவதாக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதையும் படிங்க: வாடகை பாக்கிய தாங்க.. இல்லனா வேலை நிறுத்தம் தான்..!! LPG கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம் அதிரடி அறிவிப்பு..!!
இந்த நிலையில், மின் மருந்தகச் செயல்பாடுகள் தொடர்பான மத்திய அரசின் அரசாணைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ள சங்கம், “மருந்தகத் தொழிலை நம்பி வாழும் சுமார் 5 கோடி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது” எனத் தெரிவித்துள்ளது. சிறு மற்றும் நடுத்தர மருந்தக உரிமையாளர்களின் பிழைப்பு பாதிக்கப்படுவதால், இந்தப் போராட்டம் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

மே 20-ம் தேதிக்குள் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், வேலை நிறுத்தம் நடைபெறும் நாளில் அவசர மருந்துகள் (Emergency Medicines) தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சங்கம் உறுதியளித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். மருந்து விற்பனையில் தரக்கட்டுப்பாடு, நோயாளி பாதுகாப்பு மற்றும் சிறு வியாபாரிகளின் உரிமைகள் ஆகியவற்றுக்கு இடையே சமநிலை பேண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாடகை பாக்கிய தாங்க.. இல்லனா வேலை நிறுத்தம் தான்..!! LPG கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம் அதிரடி அறிவிப்பு..!!