அமெரிக்காவின் இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரி விதிப்பால் நாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்படலாம் என்பது குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்தியாவின் பெரிய உள்நாட்டு சந்தை சர்வதேச பொருளாதார பிரச்சினைகளின் தாக்கத்தை குறைத்துவிடும் என்று உலக வங்கியின் முதன்மை பொருளாதார நிபுணர் ஆரியலியன் க்ரூஸ் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரம் உள்நாட்டு நுகர்வை அதிகம் சார்ந்திருப்பதால், ஏற்றுமதியை அதிகம் நம்பியிருப்பதில்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆரியலியன் க்ரூஸ் கூறியதாவது: “இந்தியாவின் உள்நாட்டு சந்தை ஏற்கனவே மிகப் பெரியது. எனவே, சர்வதேச நிச்சயமற்ற தன்மையால் ஏற்படும் பொருளாதார பாதிப்பை இது குறைத்து விடுகிறது. உழைக்கும் வயதிலான மக்கள்தொகை போன்ற காரணிகள், வரும் தசாப்தங்களில் இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
வரும் 2050 வரை, உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். இது விலை மதிப்பற்ற சொத்தாக விளங்குவதோடு, அதீத வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும். சர்வதேச அளவில், வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடரும்” என்றார்.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதல்... தமிழ்நாட்டுக்கு தான் அதிக ஆபத்து! அண்ணாமலை கடும் எச்சரிக்கை...!
இந்தியாவின் பெரிய உள்நாட்டு சந்தை, உலகளாவிய அழுத்தங்களான வர்த்தகப் போர்கள், இறக்குமதி வரிகள், சப்ளை சேயின் சிக்கல்கள் போன்றவற்றின் தாக்கத்தை ஈர்த்துக்கொள்ளும் திறன் கொண்டது. இதை பன்னாட்டு நிதியமும் (IMF), உலக வங்கியும் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றன.

அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 முதல் 7 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. திறன் வாய்ந்த பொருளாதாரமாக விளங்குவதால், வளர்ச்சி 6 சதவீதத்துக்கு கீழ் குறைய வாய்ப்பில்லை என்று க்ரூஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம், உள்நாட்டு நுகர்வு, உள்கட்டமைப்பு முதலீடு, டிஜிட்டல் புரட்சி போன்றவற்றை சார்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு போன்ற சர்வதேச சவால்கள் இருந்தாலும், இந்தியாவின் வளரும் மக்கள்தொகை மற்றும் உள்நாட்டு தேவை இவற்றின் தாக்கத்தை குறைக்கும்.
உலக வங்கியின் இந்த மதிப்பீடு, இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. அரசு, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் “மேக் இன் இந்தியா” திட்டங்கள் மூலம் இந்த வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த முயன்று வருகிறது.
இதையும் படிங்க: NDA கூட்டணிக்குள் மீண்டும் டிடிவி தினகரன், ஓபிஎஸ்... நயினார் நாகேந்திரன் சொன்ன 'நறுக்' அப்டேட்...!