பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் திடீரென புகை வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் இருந்த 230க்கும் மேற்பட்ட பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், இரு பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமானம், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட தயாராக இருந்தது. அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்த நிலையில், விமானம் ஓடுபாதையை நோக்கி மெதுவாக நகரத் தொடங்கியது.
அப்போது திடீரென விமானி அறை மற்றும் பயணிகள் அமரும் பகுதியில் புகை பரவத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் பதற்றத்தில் அலறியதாக கூறப்படுகிறது. உடனடியாக நிலைமையை உணர்ந்த விமானி மற்றும் விமான பணிப்பெண்கள், பாதுகாப்பு நடைமுறைகளை செயல்படுத்தினர்.
இதையும் படிங்க: இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! 20 நிமிடங்கள் திக் திக்! குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி!

பின்னர் அவசர வெளியேற்ற வாயில்கள் திறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் அவசர பாதை வழியாக வெளியேற்றப்பட்டனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், இரண்டு பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்திற்குப் பிறகு அந்த விமானத்தின் சேவை உடனடியாக ரத்து செய்யப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக புகை வெளியேறியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், விமானம் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பழுது நீக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் தீவிர விசாரணை தொடங்கியுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு என்ன, பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா, பயணிகள் எவ்வளவு நேரத்தில் வெளியேற்றப்பட்டனர் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
புறப்பட தயாராக இருந்த விமானத்தில் திடீரென புகை பரவியதால், விமான நிலையத்தில் சில நேரம் பரபரப்பு நிலவியது. அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து ஏதும் ஏற்படாததால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
இதையும் படிங்க: 5 மாதம் நீடித்த டிஜிட்டல் அரெஸ்ட்! பெண் கதறல்! ரூ.24 கோடி பணம் பறித்த கும்பல் கைது!