மேற்குவங்கச் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஹவுராவிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பேலூர் மடத்திற்கு (Belur Math) வருகை தந்து வழிபாடு நடத்தினார். ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீ சாரதா தேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் உயரிய லட்சியங்களுக்குச் சான்றாக இந்த மடம் திகழ்வதாகப் பிரதமர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சுவாமி விவேகானந்தர் தனது இறுதிக்காலத்தைக் கழித்த மற்றும் தியானம் செய்த அதே புனிதமான அறையில் பிரதமர் மோடி சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார். ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்குப் பிரதமர் மலர் தூவித் தனது மரியாதையைச் செலுத்தினார். அர்ப்பணிப்பு மற்றும் கருணையுடன் மனிதநேயத்திற்குச் சேவை செய்ய இந்தப் புண்ணிய பூமி தலைமுறை தலைமுறையாக ஊக்கமளித்து வருகிறது எனப் பிரதமர் புகழாரம் சூட்டினார்.

பிரதமர் மோடி தனது இளமைக்காலத்தில் ராமகிருஷ்ண மடத்தில் துறவியாக இணைய விரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அங்கிருந்த மூத்த துறவிகளின் அறிவுரைப்படி, அவர் மக்கள் சேவையில் (ஜன சேவை) தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அவரது இன்றைய வருகை அந்தப் பழைய நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்வதாக அமைந்தது.
இதையும் படிங்க: பிரதமரை பயங்கரவாதி என்று கூறலாமா? கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
மேற்குவங்கத்தில் இன்று 152 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. மேற்குவங்கத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 89.93% வாக்குகள் பதிவாகிப் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்திலும் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், 84.35% வாக்குகள் பதிவாகி வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை, பொதுமக்கள் அனைவரும், குறிப்பாகப் பெண்கள் மற்றும் இளைஞர்கள், இந்த ஜனநாயகத் திருவிழாவில் சாதனை அளவில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சுவாமி விவேகானந்தரின் போதனைகளுக்கும், மேற்குவங்கத்தின் கலாச்சாரத்திற்கும் மதிப்பளிக்கும் விதமாகப் பிரதமரின் இந்த வருகை அமைந்தது. தேர்தல் பரபரப்புகளுக்கு இடையே ஆன்மீக அமைதியைத் தேடிப் பிரதமர் மேற்கொண்ட இந்தப் பயணம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் பரபரப்பு! பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து!