எத்தகைய அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள தயார்!! அமெரிக்காவுக்கு கியூபா அதிபர் தடாலடி பதிலடி!
''அமெரிக்காவின் எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயார்'' என கியூபா அதிபர் மிகெல் டியாஸ் கானெல் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கியூபா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், கியூபா அதிபர் மிகெல் டியாஸ் கானெல் பதிலடி கொடுத்துள்ளார். “அமெரிக்காவின் எந்தவித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள கியூபா தயாராக உள்ளது. எங்கள் நாட்டை தாக்கவோ, ஆக்கிரமிக்கவோ முயன்றால் கடுமையான பதிலடி தரப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவில் இருந்து கியூபாவுக்கு வரும் கச்சா எண்ணெய் வழங்கலை அமெரிக்கா தடை செய்துள்ளது. இதனால் கியூபாவில் கடுமையான மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
டிரம்ப், “கியூபாவை எளிதாக விடுவிக்கலாம் அல்லது நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்” என்று அச்சுறுத்தியிருந்தார். மேலும், கியூபா மீதான தடைகளை நீக்க வேண்டுமானால் அதிபர் மிகெல் டியாஸ் கானெலை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் அமெரிக்கா விதித்துள்ளது.
இதையும் படிங்க: 24 மணி நேரம்தான் டைம்.!! ஈரான் தாக்குதல் எதிரொலி! தூதகரக அதிகாரிகள் வெளியேற சவுதி உத்தரவு!
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கியூபா அதிபர், “நாங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கப் போவதில்லை. எங்கள் அரசியல் அமைப்பும், அதிபர் பதவியும் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டவை அல்ல” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
கியூபா வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கார்லோஸ் பெர்னாண்டஸ் டி கோசியோவும், “கியூபாவின் அரசியல் அமைப்புமுறையும், அதிபர் பதவியும் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் உட்பட்டதல்ல” என்று உறுதியாகத் தெரிவித்தார்.
அரசியல் நிபுணர்கள், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைக்குப் பிறகு, இப்போது கியூபா அடுத்த இலக்காக மாறியுள்ளதாகக் கருதுகின்றனர். டிரம்ப் நிர்வாகம் கியூபாவில் ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கியூபா அதிபரின் இந்த உறுதியான எச்சரிக்கை, அமெரிக்கா-கியூபா இடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: இஸ்ரேல் தலையில் இடியை இறக்கிய ஈரான்! பதிலுக்கு பதில்!! அணுசக்தி நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்!