தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுவை எளிதாக வாங்குவதற்கு ஆன்லைன் மூலமான வசதிகளை ஏற்படுத்தித் தருவதைப் போல, ஏழை எளிய பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் நியாயவிலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்களை எளிதாகப் பெறுவதற்கு ஆன்லைன் முன்-பதிவு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய தவெக அரசு டாஸ்மாக் மது விற்பனையை நவீனமயமாக்கி, வாடிக்கையாளர்கள் சுலபமாக வாங்குவதற்கு ஆன்லைன் வழிகளை உருவாக்குவதில் காட்டும் தீவிரத்தை, பொதுமக்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய ரேஷன் விநியோகத்தில் காட்டுவதில்லை எனச் சாடியுள்ளார். சாமானிய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்கள் வாங்கும் நியாயவிலைக் கடைகளின் உள்கட்டமைப்பையும் சேவைகளையும் மேம்படுத்துவதே மக்கள் நல அரசின் முதன்மையான கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: "அத்தை சீர்.. பாட்டி சீர் நாங்கதானே குடுக்கணும்"..! வேளாண் பட்ஜெட்... சௌமியா அன்புமணி விமர்சனம்.!!

மேலும் கள யதார்த்தத்தை விளக்கிய அவர், பல நியாயவிலைக் கடைகளில் பாமாயில், அரிசி, சர்க்கரை மற்றும் துவரம்பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இருப்பில் இருந்தபோதிலும், பணியாளர்கள் இல்லை என்று கூறி பொதுமக்களுக்குப் பொருட்களை வழங்காமல் அலைக்கழிக்கும் நிலை தொடர்கிறது; இத்தகைய முறைகேடுகளைக் களைய க்யூஆர் கோட் (QR Code) அடிப்படையிலான தொழில்நுட்ப முறையைக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான ரேஷன் பொருட்களைத் தங்களது செல்போன் மூலமாகவே ஆன்லைனில் முன்கூட்டியே ஆர்டர் செய்து உறுதிப்படுத்திக் கொண்டு, பின்னர் கடைக்குச் சென்று வரிசையில் காத்திருக்காமல் உடனடியாகப் பெற்றுச் செல்லும் வகையில் ஸ்மார்ட் திட்டத்தை அரசு துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் பதுக்கப்படுவதும் முறைகேடுகளும் முற்றிலும் தடுக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!