ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் வளைகுடா நாடுகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த 2 வாரங்களாக தொடரும் போரில், நேற்று சவுதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (துபாய்) உள்ளிட்ட நாடுகளில் எண்ணெய் உள்கட்டமைப்புகள், தொழிற்பேட்டைகள் மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
சவுதி அரேபியாவில் கொத்துக்கொத்தாக டிரோன்கள் வீசப்பட்டன. சுமார் 50 டிரோன்களை சவுதி பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அந்நாடு தெரிவித்துள்ளது. ஓமன் சுகர் (Sohar) பிராந்தியத்தில் உள்ள தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனம் மீது 2 டிரோன்கள் தாக்கியதில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 10 இந்தியர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் 5 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளதாகவும், மற்றவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியுறவு அமைச்சக இணைச் செயலாளர் அசீம் மகாஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு? இந்தியா வரும் எரிவாயு கப்பல்கள்! ஈரானுடன் மத்திய அரசு தீவிர பேச்சு!

பஹ்ரைனில் நேற்று பலமுறை அபாய ஒலி எழுப்பப்பட்டு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டனர். துபாயில் ஏவுகணைகளை இடைமறித்து அழித்தபோது பாகங்கள் விழுந்து தொழில்துறை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகை பல அடி உயரம் எழுந்தது.
துபாய் சர்வதேச நிதி மையத்தில் உள்ள ஒரு கட்டிடமும் சேதமடைந்தது. ஈரான் டெஹ்ரானில் உள்ள வங்கி தாக்கப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச நிதி நிறுவனங்களை குறிவைத்து தாக்குவோம் என்று எச்சரித்திருந்தது. அதன்படி துபாயில் நேற்று தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல்களால் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. உலக நாடுகள் போரின் விளைவுகளை உற்று நோக்கி வருகின்றன. இந்தியர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வெளியுறவு அமைச்சகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறது.
இதையும் படிங்க: இன்னும் எத்தனை நாள் போர் நீடிக்கும்? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அசால்ட் பதில்!