அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பந்தர் அபபாஸ் பகுதியில் இன்று அதிகாலை அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமான நிலையம் அருகே நடைபெற்ற இந்த தாக்குதலில் ஈரானின் 4 தாக்குதல் டிரோன்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தரப்பு தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்த உடனேயே ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் முழு எச்சரிக்கையுடன் செயல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக சில மணி நேரங்களுக்குள் அமெரிக்க ராணுவ விமான தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது. எந்த அமெரிக்க தளம் தாக்கப்பட்டதென அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், அமெரிக்கா தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதைவிட கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா தொடர்புடைய எண்ணெய் கப்பல் மற்றும் மேலும் 4 சர்வதேச கப்பல்களை ஈரான் கடற்படை எச்சரித்து திருப்பி அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் முக்கிய எண்ணெய் கடத்தல் பாதையாக கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றம் சர்வதேச சந்தைகளிலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதை செய்தாலும் இனி ஈரான் தப்பிக்க முடியாது... உலகமே அதிரே ஒரே போடாய் போட்ட டிரம்ப்...!
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மற்றும் ஓமான் இணைந்து கட்டுப்படுத்தும் புதிய அமைதி ஒப்பந்தம் உருவாகி வருவதாக பரவிய தகவல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முற்றிலும் மறுத்துள்ளார். அமெரிக்க அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அவர், “சர்வதேச கடல்வழிப் பாதையை எந்த ஒரு நாடும் தனிப்பட்ட கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா அனுமதிக்காது” என்று கடுமையாக எச்சரித்தார்.
மத்திய கிழக்கில் மீண்டும் உருவாகும் இந்த பதற்றம் உலக அரசியல் மற்றும் எண்ணெய் சந்தையில் அடுத்த கட்ட தாக்கங்களை ஏற்படுத்துமா என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஈரான் தோத்தாக்கூட ஜெயிச்சிருச்சுனு சொல்வாங்க!! பத்திரிக்கையாளர்கள் மீது அதிபர் ட்ரம்ப் காட்டம்!!