அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இன்று அமெரிக்காவிற்குத் தனது கடுமையான நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். ஈரானியர்களைக் கட்டாயப்படுத்தியோ அல்லது மிரட்டியோ அடிபணிய வைக்க முடியாது என்றும், அமெரிக்காவின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை ஈரான் கவனமாக அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் ராணுவ அழுத்தங்கள் குறித்துப் பேசிய பெசெஷ்கியன் ஈரானிய மக்களை எவ்வித அழுத்தங்கள் மூலமாகவும் பணிய வைக்க முடியாது. மிரட்டல்கள் ஒருபோதும் தீர்வாகாது; மாறாக அவை பதற்றத்தையே அதிகரிக்கும். வரலாற்று ரீதியாகவே அமெரிக்காவின் நடத்தை மற்றும் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை மீறிய விதம் ஆகியவற்றின் மீது ஈரானுக்கு ஆழமான அவநம்பிக்கை உள்ளது.

இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈரான் கலந்துகொள்வது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இது குறித்து அவர் கூறுகையில் வெறும் வார்த்தைகள் பேச்சுவார்த்தைக்கு அடிப்படையாகாது. ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை அமெரிக்கா முறையாக நிறைவேற்றினால் மட்டுமே, அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக அமையும். போர் எவருக்கும் நன்மையைத் தராது. ஆனால், எங்களது நாட்டின் கண்ணியத்தை அடகு வைத்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்காது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபரை சாடிய பிரேசில் அதிபர்! ஆயுத போட்டியால் சுற்றுச்சூழல் அழியும் என எச்சரிக்கை!
அமெரிக்கா ஈரானியக் கப்பல்களைச் சிறைபிடித்ததும், பாரசீக வளைகுடாவில் நிலவும் பதற்றமுமே இந்த அவநம்பிக்கைக்குக் காரணம் எனத் தெரிகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று மசூத் பெசெஷ்கியனைத் தொலைபேசியில் அழைத்து, பிராந்திய அமைதிக்காக ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அமெரிக்காவின் தடைகள் ஈரானின் எரிசக்தி மற்றும் தொழில் துறைகளை நேரடியாகப் பாதிப்பதையும், இது ஒரு 'போர்க்குற்றம்' என்றும் பெசெஷ்கியன் முன்னதாக அமெரிக்க மக்களுக்கு எழுதிய திறந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக போர்நிறுத்தம் வரும் புதன்கிழமையுடன் முடிவடையும் நிலையில், அதிபர் பெசெஷ்கியனின் இந்த அறிவிப்பு உலக அளவில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! அடுத்த வாரம் வாஷிங்டன் செல்கிறது இந்திய குழு!