டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட அச்சிடப்பட்ட விற்பனை விலையை (MRP) விடக் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் ஊழியர்கள் உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்படுவார்கள் என்றும், அவர்கள் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையின் விவரங்கள் ஆயுள் முழுதும் அவர்களின் பணிப் பதிவேட்டில் (Service Register) கட்டாயமாகப் பதிவு செய்யப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் புதிய அதிரடி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் சில பணியாளர்கள் பாட்டிலுக்கு ₹10 முதல் ₹20 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த சட்டவிரோதக் கூடுதல் கட்டண வசூலை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (TASMAC) நிர்வாகம் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் மண்டல அதிகாரிகளுக்கும் புதிய மற்றும் கடுமையான வழிகாட்டு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: "மத்திய அமைச்சரவையில் திடீர் திருப்பம்!" - மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ராஜினாமா!
அந்தச் சுற்றறிக்கையில், "டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் எக்காரணம் கொண்டும் அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதல் விலைக்குப் மதுபானங்களை விற்கக் கூடாது. தணிக்கை மற்றும் பறக்கும் படை சோதனையின் போது அல்லது பொதுமக்கள் அளிக்கும் புகாரின் பேரில் கூடுதல் விலைக்கு விற்றது உறுதியானால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் எவ்விதத் தயவுமின்றி உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
மேலும், அவர்கள் மீது பாயும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அபராத விவரங்கள் அனைத்தும் தப்பாமல் அவர்களின் முதன்மைப் பணிப் பதிவேட்டில் (Service Register) சுட்டிக்காட்டப்பட்டுப் பதிவு செய்யப்படும். இதனால் அவர்களின் எதிர்காலப் பணி உயர்வு மற்றும் பலன்கள் ரத்தாகும் சூழல் உருவாகும்" என டாஸ்மாக் நிர்வாகம் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: "47 அதிகாரிகள் கூண்டோடு அதிரடி பணிநீக்கம்!" - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மீது மத்திய அரசு அதிரடி!