மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் லெபனானை நோக்கியும் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதால் ஈரான் பதிலடி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதற்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும், யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் களமிறங்கியுள்ளனர். ஹிஸ்புல்லா இஸ்ரேல் எல்லைக்கு அருகே ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருவதால், இஸ்ரேல் பதிலடியாக லெபனானில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், லெபனானில் கூடுதல் பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இஸ்ரேல் ராணுவத்துக்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3, 2026) இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஈரான் போரில் அடுத்த இழப்பு!! கமேனி மனைவியும் உயிரிழப்பு!! விரட்டி விரட்டி வேட்டையாடும் அமெரிக்க, இஸ்ரேல் படைகள்!!
அவர் கூறியதாவது: “இஸ்ரேல் எல்லையில் வசிக்கும் எங்கள் மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுப்பதற்காக, லெபனானில் கூடுதல் பகுதிகளை கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் நானும் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளோம்” என்றார்.

இஸ்ரேல் ராணுவம் லெபனானின் தெற்குப் பகுதிகளில் ஹிஸ்புல்லா இலக்குகளை குறிவைத்து வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே லெபனானின் சில எல்லை கிராமங்கள் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்போது மேலும் பகுதிகளை கைப்பற்றுவதன் மூலம் ஹிஸ்புல்லாவின் ராக்கெட் தாக்குதல் திறனை முடக்குவதே இஸ்ரேலின் நோக்கம் என தெரிகிறது. இதனால் லெபனானில் உள்நாட்டு பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த சம்பவம் மத்திய கிழக்கு போரை மேலும் விரிவடையச் செய்யும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. ஈரான் ஆதரவு குழுக்களான ஹிஸ்புல்லா, ஹவுதிகள், இறாக் மற்றும் சிரியாவில் உள்ள மிலிஷியாக்கள் இணைந்து இஸ்ரேல்-அமெரிக்கா தளங்களை தாக்கி வருகின்றன. இதனால் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், இஸ்ரேல் எல்லை பகுதிகள் ஆகியவை தொடர்ந்து ஆபத்தில் உள்ளன.
எண்ணெய் விலை உயர்வு, விமான சேவை ரத்து, பயணிகள் தவிப்பு போன்ற பாதிப்புகள் தொடர்கின்றன. இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை எச்சரித்து வருகின்றன. உலக நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தாலும், போர் விரிவடைவதால் உலக பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கும் அச்சம் நீடிக்கிறது. லெபனானில் இஸ்ரேலின் புதிய நடவடிக்கை மத்திய கிழக்கு போரை புதிய கட்டத்துக்கு கொண்டு செல்லும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: யுஏஇ, சவுதி, இஸ்ரேல், கத்தார் நாடுகளுக்கான விமான சேவை ரத்து! கைவிரித்தது ஏர் இந்தியா!! மக்கள் தப்பிக்க வழி இருக்கா?