இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது புதிய புத்தகமான ‘Giorgia’s Vision’ல் 2023ஆம் ஆண்டு இந்தியப் பயணத்தின்போது கிடைத்த அளப்பரிய வரவேற்பை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார். டெல்லி நகரமே தனது புகைப்படங்களால் நிறைந்திருந்ததைப் பார்த்து வியந்ததாகவும், துணைப் பிரதமர் அன்டோனியோ தஜானி ஒரு வேடிக்கையான கருத்து கூறியதாகவும் அவர் எழுதியுள்ளார்.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் ‘ரெய்சானா டயலாக்ஸ்’ நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகவும், செப்டம்பர் மாதம் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காகவும் மெலோனி இந்தியா வந்தார்.
மார்ச் மாதப் பயணத்தின்போது டெல்லி சாலைகள் முழுவதும் அவரது சிரித்த முகத்துடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்து மெலோனி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பயணம் முடிந்து திரும்பும் போது கூட “நன்றி” என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததாக அவர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மோடியிடம் மெலோனி சொன்ன ரகசிய வார்த்தை! மைக்கில் பதிவாகி வைரல்!! FAMOUS COUPLE!!

அப்போது அவருடன் வந்த இத்தாலி துணைப் பிரதமர் அன்டோனியோ தஜானி, “டெல்லியில் உங்களுக்கு இருக்கும் இந்த வரவேற்பைப் பார்க்கும்போது, இங்கு தேர்தலில் போட்டியிட்டால் 10 லட்சம் ஓட்டுகள் வாங்கி விடுவீர்கள் போலிருக்கிறது” என்று ஜோக் அடித்ததாக மெலோனி நினைவுகூர்ந்துள்ளார். இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்துகொண்ட மெலோனி, இந்திய மக்களின் அன்பான வரவேற்பை என்றும் மறக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
புத்தகத்தில் மெலோனி பல உலகத் தலைவர்களுடனான தனது நட்பைப் பற்றியும் எழுதியுள்ளார். அல்பேனியப் பிரதமர் எடி ராமா இத்தாலிய மொழியில் சரளமாகப் பேசக்கூடியவர் என்றும், செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வுசிச் இத்தாலிய ஒயின் மீது தீவிர விருப்பம் கொண்டவர் என்றும், ஒரு முறை தனது பிறந்தநாளில் ஆரஞ்சு ரோஜாக்களைப் பரிசளித்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இத்தாலி பிரதமரின் இந்தப் புத்தகம் இந்தியா-இத்தாலி உறவுகளின் வலிமையை மீண்டும் உலகுக்கு நினைவூட்டுகிறது. 2023ஆம் ஆண்டு அவருக்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பு இரு நாட்டு உறவுகளில் ஒரு முக்கிய தருணமாக அமைந்தது என்பதை இந்த நினைவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. மெலோனியின் இந்தப் பகிர்வு தற்போது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: "அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம்"..! EPS பங்கேற்பு... தலைமைக் கழகம் முக்கிய அறிவிப்பு..!!