ஜார்க்கண்டில் அரசு பணிகளுக்கான மாநில அளவிலான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வெற்றி கண்டது நாடு முழுவதும் பேசுபொருளானது. அதேபோல், ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த ஜூலை 25ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் மற்றும் பணி நியமனங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம்சாட்டினர். எனவே, ஜார்க்கண்ட் பொதுப்பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஜார்க்கண்ட் ஊழியர் தேர்வாணையம் நடத்திய 13 நியமனத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: “மாணவர்களை நேரில் சந்தியுங்கள்! ஜார்க்கண்ட் போராட்டம்: ஹேமந்த் சோரனுக்கு ராகுல் திடீர் அழுத்தம்!
இந்தப் போராட்டத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கிய மாணவர் சங்கத் தலைவர் தேவேந்திரநாத் மகதோவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதற்கிடையே, கடந்த வாரம் சட்டப்பேரவையை நோக்கி பேரணியாகச் சென்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், மாணவர் தலைவர்களை நேற்று சந்தித்த முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார். இதைக் கேட்ட மாணவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்தனர்.
மேலும், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் போட்டித் தேர்வுகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் குளறுபடிகள் குறித்து சிஐடி விசாரணை நடத்தவும் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டார்.
தேர்வை ரத்து செய்வதாக ஹேமந்த் சோரன் அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர் தலைவர் தேவேந்திரநாத் மகதோ, அமைச்சர்கள் முன்னிலையில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
அதேநேரத்தில், முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை மாணவர்களின் போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், முறையாகப் படித்து தேர்ச்சி பெற்று, பணி நியமன ஆணையை எதிர்பார்த்துக் காத்திருந்த மற்றொரு தரப்பு மாணவர்கள், அரசின் இந்தத் தேர்வு ரத்து முடிவுக்கு எதிராக தற்போது போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: ஜார்க்கண்டில் நக்சலைட் வேட்டை! ரூ.1 கோடி சன்மானம் பெற்ற மாவோயிஸ்ட் தலைவர் கைது! 103 பேர் சுற்றிவளைப்பு!