தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் தாய் மாமன் தங்க மோதிரத் திட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜோய் ஆலுக்காஸ் முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். 2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் அறிவித்த முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றுதான் இந்தத் திட்டம்.
அரசு மருத்துவமனைகளிலும் அரசு சுகாதார மையங்களிலும் ஜூன் 22, 2026 முதல் பிறக்கும் குழந்தைகளுக்கும் அவர்களது தாய்மார்களுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட 22 கேரட் (916 ஹால்மார்க்) தங்க மோதிரம் வழங்கப்படும். ஆண்டுக்கு சுமார் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டம் செப்டம்பர் 15 அன்று அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் முறையாகத் தொடங்கப்படவுள்ளது. இதற்கான தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் ஜூலை 14 அன்று டெண்டர் அழைப்பு விடுத்தது.
மொத்தம் 4,41,667 மோதிரங்களுக்கு 11 நிறுவனங்கள் பங்கேற்றன. தங்கத்தின் சந்தை விலையைத் தவிர்த்து, செய்கூலி, சேதாரம், காப்பீடு, போக்குவரத்து, பிஐஎஸ் ஹால்மார்க் உள்ளிட்ட அனைத்து கூடுதல் செலவுகளுக்கும் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் வெறும் ரூ.0.01 (ஒரு பைசா) எனக் குறைந்த விலைப்புள்ளியை அளித்தது. இதனால் அது எல்1 நிறுவனமாகத் தேர்வானது. தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற டெண்டர் சட்டத்தின்படி மற்ற நிறுவனங்களும் அதே விலையை ஏற்க அழைக்கப்பட்டன. அதில் கல்யாண் ஜூவல்லர்ஸ் மட்டும் ஒப்புக்கொண்டதால், 70:30 என்ற விகிதத்தில் இரு நிறுவனங்களுக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.755 கோடி டெண்டர் ஜோய் ஆலுக்காஸ் வசமா? ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் எதிர்பார்ப்பு..!!

முதற்கட்டமாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்திற்குத் தேவையான சுமார் 1,28,499 மோதிரங்கள் வழங்கப்படும். ஒரு பைசா விலைப்புள்ளி காரணமாக “லாப நோக்கமில்லாமல் எப்படி செய்ய முடியும்?”, “முன்னாள் விளம்பரத் தொடர்பு உள்ளதா?” என விமர்சனங்கள் எழுந்தன.
இதற்குப் பதிலளித்த ஜோய் ஆலுக்காஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டின் தாய் மாமன் தங்க மோதிரத் திட்டத்தில் பங்கேற்பதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். லாப நோக்கத்திற்காக அல்லாமல், சமூகத்திற்குத் திருப்பி அளிக்கும் விருப்பத்தினாலேயே இத்திட்டத்தில் இணைந்துள்ளோம். மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். நாங்கள் வழங்கும் ஒவ்வொரு மோதிரமும் தூய்மை, ஹால்மார்க் தரம் மற்றும் நேர்த்தியான கைவினைத்திறனுக்கான எங்கள் வாக்குறுதியை நிலைநிறுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு இதுவரை இது குறித்து தனி விளக்கம் அளிக்கவில்லை. திட்டம் அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை ஊக்குவிப்பதற்கும், தாய்-குழந்தை நலனை மேம்படுத்துவதற்கும் உதவுவதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: முரண்டு பிடிக்கும் கர்நாடகா..! தண்ணீர் தர என்ன பிரச்சனை.? வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்..!!