திருபுவனம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேற்று விசாரணையை தொடங்கினார். முதலில் திருப்புவனம் கூடுதல் சூப்பிரண்டு சுகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து, நகை தொலைந்து போனது தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட சிஎஸ்ஆர். மற்றும் எப்ஐஆர் ஆவணங்கள் குறித்து கேட்டறிந்தார் அப்போது, போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கோயிலில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகள் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது.

தொடர்ந்து, தனிப்படை போலீசார் தாக்குதல் நடத்தியது தொடர்பாக வீடியோவை பதிவு செய்த கோயில் பணியாளர் சக்தீஸ்வரன், மடப்புரம் கோயில் அறநிலையத்துறை அதிகாரி, அலுவலக உதவியாளர் பெரியசாமி, கோயில் பணியாளர்கள் பிரவீன்குமார், வினோத்குமார், ஆட்டோ டிரைவர் அருண்குமார், கோயில் சிசிடிவி கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக நீதிபதி விசாரணை நடத்தினார்.
இதையும் படிங்க: இனி போலிசில் இது வேண்டவே வேண்டாம்! அஜித்குமார் மரணம் எதிரொலி.. ஆக்ஷனில் இறங்கிய டிஜிபி..!
அதன்பிறகு, அஜித்குமார் தரப்பு வக்கீல்களில் ஒருவரான கணேஷ்குமாரிடமும் நீதிபதி விசாரணை நடத்தி, பல்வேறு தகவல்களை கேட்டறிந்தார். சுமார் 9 மணி நேரத்திற்கு மேலாக இரவு வரை விசாரணை தொடர்ந்தது. முதலில் ஏ.டி.எஸ்.பி., சுகுமார் அழைக்கப்பட்டு வழக்கு விபரங்கள் , ஆவணங்கள் , கோயில் சி.சி.டி.வி., ஹார்ட் டிஸ்க்குகள் பெறப்பட்டன. போலீசார் தாக்குதலை அலைபேசியில் பதிவு செய்த சக்தீஷ்வரனிடம் விசாரணை நடந்தது.

தொடர்ச்சியாக கோயில் ஊழியர் பெரியசாமி, உதவி ஆணையர் கார் டிரைவர் கார்த்திக், கோயில் சி.சி.டி.வி., கண்காணிப்பாளர் சீனிவாசன், காரை பார்க் செய்த ஆட்டோ டிரைவர் அருண், அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பிரவீன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. ஊழியர்களிடம் விசாரணை முடிந்தாலும் பக்கத்து அறையில் தங்க வைக்கப்பட்டு மீண்டும், மீண்டும் அழைத்து விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து விசாரணையின் போது அஜித் தாக்கப்பட்ட இடத்தில் ரத்தக்கறையை ஏன் சேகரிக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அஜித் குமார் உடலில் 44 காயங்கள் உள்ளன, எதை வைத்து அடித்தனர். வெறும் பிளாஸ்டிக் பைபால் அடித்து தான் இத்தனை காயம் ஏற்பட்டதா? காவல்துறையின் செயல் குறித்தே கேள்வி எழுகையில், என்ன செய்வது. காவல் நிலையத்தில் விசாரணை நடக்கவில்லை அதன் சி.சி.டி.வி. காட்சிகள் இல்லை, என்று கூறிய நீதிபதிகள் 'அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது' என்றனர்.

சம்பவம் நடந்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை சிடியாக தாக்கல் செய்தார். அஜித் குமார் தாக்கப்பட்டதாக பதிவான வீடியோவை பதிவு செய்த கோவில் ஊழியரிடம், 'இந்த வீடியோவை எங்கிருந்து எடுத்தீர்கள்?' என நீதிபதி கேள்வி எழுப்பிய போது, கோவில் கழிவறையிலிருந்து எடுத்ததாக அவர் பதிலளித்தார்.
அஜித்தின் பிறப்புறுப்பிலும், வாய், காதுகளில் மிளகாய் பொடி போடப்பட்டுள்ளது, அஜித் குமாரை கோசாலையில் வைத்து கடினமாக தாக்கியுள்ளனர், பல இடங்களுக்கு கொண்டு சென்றும் தனிப்பிரிவு போலீசார் தாக்கியுள்ளனர் என்று கூறிய நீதிபதிகள் இந்த விசாரணையில் தங்க நகைகள் மீட்கப்படவில்லை, என்று குறிப்பிட்டனர்.

மேலும், 50 லட்சம் இழப்பீடு, அஜித் தம்பிக்கு கோயிலில் பணி வழங்கப்படும் என அஜித் குமார் குடும்பத்திடம் பேரம் பேசி உள்ளனர், சில சாட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், விசாரணை அலுவலர் முழுமையான தகவலை சேகரிக்கவில்லை என்று நீதிபதிகள் கூறினர்.
இந்நிலையில், இன்று 2-வது நாளாக நீதிபதி விசாரணையை துவக்கி உள்ளார். அஜித்குமார் தாக்கப்பட்ட இடமான கோயிலின் கோசாலை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினார். மடப்புரம் கோயில் நிர்வாகிகள், கோயில் அலுவலர்கள் பிரபு, கார்த்திக் ராஜாவிடமும்விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இனி போலிசில் இது வேண்டவே வேண்டாம்! அஜித்குமார் மரணம் எதிரொலி.. ஆக்ஷனில் இறங்கிய டிஜிபி..!