தமிழக அரசியலில் தற்போது 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவும் காங்கிரஸும் இணைந்து போட்டியிடுவது குறித்து பல்வேறு ஊகங்களும் விவாதங்களும் எழுந்து வருகின்றன. சிலர் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாகவும், தொகுதி பங்கீடு மட்டுமின்றி ஆட்சியில் பங்கு கோரும் குரல்கள் வலுத்து வருவதாகவும் பேசி வந்தனர். குறிப்பாக காங்கிரஸ் தரப்பிலிருந்து சிலரது அறிக்கைகள் இந்த சலசலப்பை அதிகரித்தன.
ஆட்சியில் பங்கு என்பது தொடர்பாக மாணிக்கம் தாகூர் போன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் பேசுவது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆட்சியில் பங்கு கேட்க தங்களுக்கு உரிமை இருக்கிறது என்று திட்டவட்டமாக மாணிக்கம் தாகூர் தெரிவித்து வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரசுக்கு உரிமை உண்டு என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த சூழலில் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி திட்டவட்டமான நிலைப்பாட்டை வெளியிட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசினார். அப்போது, திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெளிவாகத் தெரிவித்தார். திமுக தலைமைக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் இடையே இணக்கமான நல்லுறவு நிலவுவதாகவும், இதனால் கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: திருச்சியை 2வது தலைநகரமாக்கனும்..! கனிமொழியிடம் முக்கிய கோரிக்கை மனு கொடுத்த துரை வைகோ..!
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படும் என்றும், இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், அதிமுக தங்கள் கட்சி கூட்டணிகளை பார்க்காமல் மற்ற கட்சி கூட்டணிகளை பார்த்து கவலைப்படுவது ஏன் என்றும் கேட்டு உள்ளார். இதில் எந்தவித மாறுதல் வருவதற்கு வாய்ப்பில்லை என்ற தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாதி வன்மம்... அமைச்சர் மூர்த்தி உருவபொம்மை எரிக்க முயற்சி... மதுரையில் பதற்றம்..!