கர்நாடகாவில் வனத்துறையினரால் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கத்தி, துப்பாக்கி, மான் இறைச்சி உள்ளிட்ட பொருட்களை விசாரணைக்காக காவல்துறையிடம் வனத்துறை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இதில் பயன்படுத்தாத ஸ்டிக்கர் கூட பிரிக்கப்படாத நிலையில் செருப்பு, வனத்துறையின் பை இருப்பது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்குட்பட்ட ஹனூர் அருகே வனப்பகுதியில் கடந்த 15.ம் தேதி சுதந்திர தினத்தன்று, தோமையார்பாளையம் கிராமத்தை அந்தோணிசாமி, பீட்டர் மற்றும் குமார் ஆகிய மூன்று பேரை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். காணாமல் போன மாடுகளை தேடி சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கிராம மக்கள் கூறும் நிலையில், வேட்டைக்காக வந்தவர்களை சுட்டுக்கொன்றதாக கூறிய கர்நாடக வனத்துறை இது தொடர்பாக இரண்டு நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் 35 கிலோ மான் இறைச்சியை பறிமுதல் செய்ததாக கூறி இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக, நபர்களின் பெயர், எண்ணிக்கை குறிப்பிடாமல் வன அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து ஹனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்டதாக துப்பாக்கி, மான் இறைச்சியை வனத்துறை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ள நிலையில், அதில் மேலும் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அதில், கத்தி உள்ளிட்ட பொருட்களுடன் புத்தம் புதிய ஸ்டிக்கர் பிரிக்காத ஒரு ஜோடி செருப்பு மற்றும் MM hills என அச்சிட்ட வனத்துறையின் shoulder bag ஒன்றும் உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING கர்நாடகாவில் 3 தமிழர் சுட்டுக்கொலை... வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு... FIR-ல் முக்கிய ட்விஸ்ட்...!
திட்டமிட்டு வனத்துறையினர் மூவரையும் கொலை செய்த்தாக கிராம மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த பொருட்கள் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது. கொலையை மறைக்க வனத்துறையினரே தடயங்களை உருவாக்கி இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்த பொருட்களை போலீசார் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி உள்ளனர். கைப்பற்றியதாக கூறப்படும் துப்பாக்கி உண்மையில் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டதா.? அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்கள் யாருடையவை.? என ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இதனிடையே, விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ,IAS அதிகாரியான கொள்ளேகால் உதவி ஆணையர் தினேஷ் குமார் மீனா சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒரு வாரத்தில் தனது விசாரணை தொடர்பாக அவர் அரசுக்கு அறிக்கை அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கிச்சூடு: வேட்டைக்கு சென்ற 3 பேர் சுட்டுக்கொலை!