கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாட்டையே மிகப்பெரிய அளவில் உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து கரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டார்கள். குறிப்பாக தற்போது அமைச்சர்களாக இருக்கும் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் கரூர் பகுதியை சேர்ந்த மாவட்ட செயலாளர் மதியழகன் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சிபிஐக்கு மாற்றப்பட்டு அங்கும் விசாரணை என்பது நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தான் தற்போதைய முதலமைச்சர் விஜய், முக்கியமாக அதிகாரிகள் பணியிட மாற்றம் என்பதை மேற்கொண்டு வருகிறார். அந்த அடிப்படையில் தற்போது கரூர் மாவட்டத்தில் இருக்கும் டிஎஸ்பி முதல் காவலர் வரை பல பேரை அதிரடியாக மாற்றம் செய்து உத்தரவு என்பது தமிழக டிஜிபி மூலம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக கரூர் துயர சம்பவம் இந்த 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட முக்கிய காவல்துறை அதிகாரியான டிஎஸ்பி செல்வராஜ் மற்றும் ஆய்வாளர் மணிவண்ணன் உட்பட அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
தமிழக டிஜிபி பிறப்பித்த உத்தரவில் கரூர் மாவட்டத்தில் மூன்று டிஎஸ்பிக்கள், 10 ஆய்வாளர்கள், ஐந்து உதவி ஆய்வாளர்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக சிபிஐ டிஎஸ்பி செல்வராஜ் மற்றும் ஆய்வாளர் மணிவண்ணன் இவர்கள் இருவரையுமே இந்த துயர சம்பவம் இந்த 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியது.
இதையும் படிங்க: தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி யார்?! யாரை நியமிக்கப் போகிறார் முதல்வர் விஜய்?!
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இதில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆய்வாளர் மணிவண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் கரூர் நகர போலீசார் தற்போதைய அமைச்சர்களாக இருக்கும்ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்கு என்பது பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மகாராணி-னு நெனப்போ.? சர்ச்சையில் சிக்கிய கவுண்டம்பாளையம் எம்எல்ஏ விளக்கம்..!