கடந்த மாதம் செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற விஜயின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் இந்நிலையில் சம்பவத்துக்கான விசாரணை கரூர் சுற்றுலா மாளிகையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணை சிபிஐ அதிகாரிக்கு மாற்றப்பட்டு கடந்த மாதம் 19 ஆம் தேதியிலிருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், வணிக வளாக கடை உரிமையாளர்கள், காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள், தவெக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன், இணை பொது செயலாளர் நிர்மல் குமரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது பிரச்சார கூட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் மற்றும் நடந்த சம்பவங்கள் குறித்தும், சந்தேகப்படும் சில நபர்களின் பெயர்கள் குறித்தும் சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சிபிஐ வசம் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்? - இறுகும் பிடி... 2வது நாளாக ஆனந்த், ஆதவிடம் விசாரணை...!
இந்நிலையில் இன்று, இந்திரா நகர் பகுதியில் வசித்து வந்த இறந்த சிறுவனின் பெற்றோர் விமல் – மாதேஸ்வரி, இறந்த சந்திராவின் கணவர் செல்வராஜ்,கோடாங்கிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷின் தம்பி சக்திவேல். கரூர் வெங்கமேடு பகுதியைச் சார்ந்த பிரபாகரன் உட்பட 10 பேருக்கு மேல் சம்மன் அனுப்பப்பட்டு, தற்போது 9 குடும்பத்தை சார்ந்தவர்கள் தற்போது கரூர் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். சம்பவத்தின் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரூரில் என்ன நடந்தது? ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உரிமையாளரிடம் துருவித் துருவி விசாரணை..!