ஆந்திர மாநில எல்லையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் விசைப்படகுகளையும் மீட்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் இன்று ஒரு நாள் அதிரடி அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநில அதிகாரிகளால் சென்னை மீனவர்களின் 7 விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 70 மீனவர்களும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும், ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் விசைப்படகுகளையும் மீட்கத் தமிழக அரசு எவ்விதத் தீர்க்கமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதையும் படிங்க: 11 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை பிடிப்பு..! ராமேஸ்வரத்தில் இன்று ஸ்ட்ரைக்..!
இப்போராட்டத்தின் காரணமாகக் காசிமேடு துறைமுகத்தில் மீன் வியாபாரம், ஐஸ்கட்டி உற்பத்தித் தொழில் மற்றும் ஏற்றுமதிப் பணிகள் என மீன்பிடி சார்ந்த அனைத்துத் தொழில்களும் முற்றிலும் முடங்கியுள்ளன. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களிலும் நாளொன்றுக்கு ரூ.10 கோடிக்கும் மேல் வர்த்தகப் பாதிப்பும் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளதாக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர அரசுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, சிறைபிடிக்கப்பட்ட 70 மீனவர்களையும் படகுகளையும் மீட்கத் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி நாளை ஆந்திரா-கர்நாடகா பயணம்.. பல கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்!