நடிகர் எஸ்.ஜே. சூர்யா இயக்கி, நடித்து வரும் ‘கில்லர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீவிபத்து, திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓட்டேரி பின்னி மில் வளாகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது கேஸ் பலூன் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்.ஜே. சூர்யா இயக்குநராக மீண்டும் களமிறங்கியுள்ள ‘கில்லர்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது சென்னை ஓட்டேரியில் உள்ள பின்னி மில் வளாகத்தில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், இன்று அதிகாலை படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது பயன்படுத்தப்பட்ட கேஸ் பலூன் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தீவிபத்தில் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த மதன் என்பவர் உயிரிழந்தார். மதுரவாயலைச் சேர்ந்த அவர், படத்தில் தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கர்நாடக முதல்வர் சிவக்குமார்! துணை முதல்வர் பரமேஸ்வரா!! போட்டோ போட்டு அறிவித்தார் சித்தராமையா!


இந்த விபத்தில் மேலும் மூவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், 10-க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆரம்பக்கட்ட விசாரணையில் பாதுகாப்பு நடைமுறைகளில் அலட்சியம் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, படப்பிடிப்புக்காக கேஸ் வழங்கிய ஒப்பந்ததாரர் ராமு மற்றும் பணிகளை மேற்பார்வையிட்ட பொறுப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் பிரிவுகளின் கீழ் இருவர்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திரைத்துறையில் படப்பிடிப்பு தளங்களின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிவக்குமார் தலைமையில் கர்நாடக அமைச்சரவை பட்டியல் ரெடி! சித்தராமையா மகனுக்கு அமைச்சர் பதவி!!