தர்மபுரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு மற்றும் அறநிலையத் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் புலிக்கரை ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள அருள்மிகு கோடலம்மன் கோயில், செல்லியம்மன் கோயில், ஈஸ்வரன் கோயில் மற்றும் பெருமாள்சாமி கோயில் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களைப் பாதுகாத்து மீட்கக் கோரி, திருத்தொண்டர் அறக்கட்டளையின் தலைவர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், "தர்மபுரி பகுதியில் உள்ள இக்கோயில்களுக்குச் சொந்தமான பல நூறு ஏக்கர் நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு, அவற்றில் வீடுகள் மற்றும் வணிகக் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், அறநிலையத் துறைக்கே தெரியாமல் சிலர் சட்டவிரோதமாக வாடகை வசூல் செய்து பெரும் மோசடியிலும் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஆன்மீகச் சொத்துக்களை மீட்கக் கோரி கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் பல கோரிக்கை மனுக்களை அளித்தும் அரசுத் தரப்பில் எந்தவொரு தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: 71.24 ஏக்கர் நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர்! வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு!
இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் புகார் மனு மீது ஏற்கனவே துறையின் சார்பில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுத் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என விளக்கம் அளித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தர்மபுரி புலிக்கரை மற்றும் காரிமங்கலம் கிராமங்களில் உள்ள கோயில் நில ஆக்கிரமிப்புகள் குறித்து மனுதாரர் அளித்த புகாரின் அடிப்படையில், உரிய விசாரணையை நடத்தி 12 வாரங்களுக்குள் சட்டப்பூர்வமாக ஆக்கிரமிப்புகளை அகற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்து சமய அறநிலையத் துறை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு ஆக்கிரமிப்பாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், ஆன்மீக அன்பர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ்! மருதமலை குடமுழுக்கு வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி!