ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த இரண்டு கைதிகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த 34 வயது மாடல் நேகா மற்றும் அல்வாரைச் சேர்ந்த ஹனுமன் பிரசாத் ஆகியோர் வெவ்வேறு கொலை வழக்குகளில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர்.
இருவரும் சிறையில் சந்தித்து காதலித்து, நேற்று (ஜனவரி 23) திருமணம் செய்து கொண்டனர். இதற்காக ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அவர்களுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கியது.
நேகா ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர். மாடலிங் தொழில் செய்து வந்த இவர், திக்ஷந்த் கம்ரா என்ற காதலனுக்கு கடன் தொல்லை இருந்ததால் உதவ முயன்றார். கடன் கொடுத்த தொழிலதிபர் துஷ்யந்த் ஷர்மாவை கடத்தி 3 லட்சம் ரூபாய் பறித்தார். புகார் கொடுக்கலாம் என்ற அச்சத்தில் காதலன் மற்றும் நண்பருடன் சேர்ந்து ஷர்மாவை கொலை செய்தார். இந்த வழக்கில் நேகா உட்பட மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் - சேகர்பாபு சந்திப்பு!! சபாநாயகர் அறையில் நடந்த மீட்டிங்!! தூண்டில் போடும் திமுக?!
அதேபோல், அல்வாரைச் சேர்ந்த ஹனுமன் பிரசாத் ஏற்கனவே திருமணமான சந்தோஷி என்ற பெண்ணை காதலித்தார். காதலுக்கு இடையூறாக இருந்த சந்தோஷியின் கணவர் பன்வாரிலாலை கொலை செய்ய திட்டமிட்டனர்.
2017-ல் ஹனுமன் நண்பர்களுடன் சென்று பன்வாரிலாலை கொன்றார். சம்பவத்தை பார்த்த சந்தோஷியின் மூன்று குழந்தைகள் மற்றும் உறவினரையும் அடுத்தடுத்து கொன்றனர். இந்த கொடூர கொலைகளுக்காக ஹனுமன், சந்தோஷி உட்பட நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

வெவ்வேறு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ராஜஸ்தான் சிறைத்துறையின் சீர்திருத்த நடவடிக்கையின் கீழ் 'சங்கனேர் திறந்தவெளி சிறை'க்கு மாற்றப்பட்டனர்.
அங்கு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பழைய காதல்களை உதறிவிட்டு திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பரோல் கோரி விண்ணப்பித்தனர். நீதிமன்றம் அவர்களது கோரிக்கையை ஏற்று 15 நாட்கள் பரோல் வழங்கியது.
இதன்படி, ராஜஸ்தானின் பரோடாமியோவில் நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக பரோல் வழங்கப்பட்டதற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
"கொலைகாரர்களுக்கு திருமண வாய்ப்பு கொடுப்பது நியாயமா?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சிறைத்துறையின் சீர்திருத்த நடவடிக்கை என்ற போர்வையில் இத்தகைய அனுமதி வழங்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: DPI வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டம்..! குண்டு கட்டாக கைது செய்த போலீஸ்..!