தமிழகத்தில் மழைநீர் வடிகால்கள் மற்றும் காலி இடங்களில் தேங்கும் நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுவதைத் தடுக்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடியான பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. குறிப்பாக, கொசுத் தொல்லை குறித்த புகார்கள் மீது 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த விஜயராஜா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது.
தண்ணீர் தேங்கி இருப்பது மற்றும் கொசு ஒழிப்பு தொடர்பாகப் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது அதிகபட்சமாக 48 மணி நேரத்திற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகத் தனிப்பயன்பாடு கொண்ட இலவச உதவி எண்களை அரசு உருவாக்க வேண்டும். தண்ணீர் தேங்கக் காரணமாக இருக்கும் கட்டுமானப் பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். சுகாதார விதிகளை மீறும் கட்டுமான நிறுவனங்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் நான் தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிய அடுத்த 4 வாரங்களுக்குள் விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இணையாக, பொதுமக்கள் தங்கள் வீடுகளின் மேற்கூரைகள், பூந்தொட்டிகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மழைநீர் வடிகால்கள் மற்றும் கழிவுநீரை அப்புறப்படுத்தும் பணிகளுடன், கொசு விரட்டும் புகை போடும் பணிகளைத் தொய்வின்றி நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர். இந்த உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்தும் வகையில், இதன் நகலைத் தலைமைச் செயலாளர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பி வைக்கப் பதிவுத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோடைக் காலத்திலும், பருவமழைக்கு முன்னரும் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவது நோய்ப் பரவலைத் தடுக்கப் பெரிதும் உதவும் எனச் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல்..!! சென்னையில் இருந்து 30ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!