மதுரை: மதுரை மாநகராட்சி தலைமை பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமை பொறியாளர் ராமசாமி உள்ளிட்ட 14 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாநகராட்சி தலைமை பொறியாளர் அலுவலகத்தில் இரவு நேரத்தில் சிலர் பணத்துடன் வந்து, தலைமை பொறியாளரை சந்திக்க இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. சத்யசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சூர்யகலா, ரமேஷ்பிரபு, ஜெயபிரபா உள்ளிட்ட போலீசார் அடங்கிய குழுவினர் மாநகராட்சி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது தலைமை பொறியாளரை சந்திப்பதற்காக வந்திருந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் பணம் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பணத்துக்கான உரிய கணக்கு அல்லது ஆவணங்கள் இல்லை என விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மதுரைக்கு CM விஜய் விசிட்..! சாக்கடைக்கு தகர ஷீட்..! வைரலாகும் சம்பவம்..!!

இதில் உதவி பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் சிலரிடம் இருந்து பணம் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல் ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஒருவரிடமும் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. மொத்தம் 10 பேரிடம் இருந்து ரூ.1.35 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பணம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக தலைமை பொறியாளருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக இந்த பணம் கொண்டு வரப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக தலைமை பொறியாளர் ராமசாமி, உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட 14 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பணம் வைத்திருந்தவர்களின் பின்னணி, பணத்தின் மூலாதாரம் மற்றும் மாநகராட்சி பணிகளுடன் அதற்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மாநகராட்சி அலுவலகத்தில் இரவு நேரத்தில் நடந்த இந்த சோதனை மற்றும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மதுரை மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் பணம் கொண்டு வரப்பட்டதற்கான காரணம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு குறைவு: சுகாதார செயலாளர் தாரேஸ் அகமது பேட்டி!