சிவகங்கையைச் சேர்ந்த சங்கரன் என்பவர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் சட்டவிரோத சுரங்கப் பணிகளைத் தடுக்கவும், அதில் ஈடுபட்டவர்களிடம் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூலிக்க கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.சதிஷ்குமார், ஜோதிராமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுரங்கத் துறை துணை இயக்குநர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சட்டவிரோத சுரங்கத்தில் ஈடுபட்ட 18 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதில் 3 பேரிடமிருந்து முழு அபராதத் தொகையும், ஒருவரிடமிருந்து பகுதி தொகையும் வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களிடம் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அபராத வசூல் நடவடிக்கைகளை தாமதமின்றி நிறைவேற்ற உத்தரவிட்டனர்.
அதேசமயம், மனுதாரரின் நோக்கங்கள் குறித்து எங்களுக்கு தீவிரமான சந்தேகங்கள் உள்ளன. பொது நல வழக்கு தாக்கல் செய்யும் நபர் நீதிமன்றத்திற்கு சுத்தமான கைகளுடன் வர வேண்டும். அவருக்கு பொதுநலன் மட்டுமே மனதில் இருக்க வேண்டும்; வேறு எதுவும் இருக்கக்கூடாது. பொதுநல வழக்குகளை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்த முயன்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இதையும் படிங்க: தற்குறி பழனிச்சாமி என்ற அண்ணாமலை, இன்று அண்ணன் என்கிறாரா? தவெக நிர்மல் குமார் அனல் பறக்கும் பேட்டி!