புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை, ஆண்டு முழுவதும் உள்ள அமாவாசைகளிலேயே மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றுடன் இதுவும் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் அளிப்பதற்குச் சிறப்பான நாளாக விளங்குகிறது.
இந்த ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி சனிக்கிழமை அனுசரிக்கப்படும் இந்நாளில், முன்னோர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களின் ஆசியைப் பெறும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கிறது. ஆத்ம ஞான மைய யூடியூப் சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி இது குறித்து விளக்கியுள்ளார். முன்னோர்களுக்கு நன்றி சொல்லும் நாளாகவே இது வகுக்கப்பட்டுள்ளது.
வெளியூர்களுக்குச் சென்று தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் இதைச் செய்யலாம். பெரிய பொருட்கள் தேவையில்லை. எள் மட்டும் போதும். கையில் எள்ளை வைத்துக்கொண்டு, தெரிந்த முன்னோர்களையும் தெரியாத முன்னோர்களையும், நம்மை வாழ்த்திய நல்ல உள்ளங்களையும் நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபட வேண்டும். இதன்பிறகு பூஜை அறையில் விளக்கேற்றி குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
இதையும் படிங்க: "தலைமகன் தளபதி... எளிமையான தலைவன்"..! சர்ச்சைகளுக்கு டாட் வைத்த நாஞ்சில் சம்பத்..!

தாய் அல்லது தந்தை இல்லாத ஆண்கள் தர்ப்பணம் செய்யலாம். பெண்கள் எள்ளும் தண்ணீரும் இறைக்கும் செயலைத் தவிர்த்துவிட்டு, மற்ற வழிபாடுகளைச் செய்யலாம். அமாவாசை நாளில் பசுமாட்டிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவதும் நல்லது. இந்த ஆண்டு அமாவாசைத் திதி அக்டோபர் 9 இரவு 9.53 மணிக்குத் தொடங்கி அக்டோபர் 10 இரவு 9.34 மணிக்கு முடிவடைகிறது. தர்ப்பணம் அளிக்கச் சிறந்த நேரம் அக்டோபர் 10 காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை. அதிலும் குறிப்பாக 10.35 மணி முதல் 11.55 மணி வரை மிகச் சிறப்பு.
இலை போட்டுப் படையல் இடும் நேரம் மதியம் 12 முதல் 1 மணி வரை. காலையில் தர்ப்பணம், மதியம் அன்னதானம் அல்லது முன்னோர் வழிபாடு, மாலை அகல் விளக்கேற்றி வழிபாடு என இந்த மூன்று எளிய செயல்களைச் செய்தாலே முன்னோர்களின் மனம் குளிரும் என தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார். பித்ரு பட்சத்தின் இறுதி நாளான இதில் அனைத்து முன்னோர்களுக்கும் தர்ப்பணம் அளிப்பது அவர்களின் ஆன்மாவை சாந்தப்படுத்தும் என்பது ஆன்மீக நம்பிக்கை.
இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு... ஒரே போடாய் போட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!