சென்னை மெட்ரோ ரயில் உள்கட்டமைப்புப் பாதைத் திட்டப் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருவதைத் தொடர்ந்து, அடையாறு எல்.பி. (L.B Road) சாலையில் நாளை (ஜூன் 27, 2026) சனிக்கிழமை முதல் மாபெரும் போக்குவரத்து மாற்றங்கள் அமலுக்கு வரும் என்று சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல்துறை (GCTP) அறிவித்துள்ளது.
சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வச் செய்திக்குறிப்பின்படி, மெட்ரோ ரயில் உள்கட்டமைப்புப் பணிக்காக எல்.பி. சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பிலிருந்து எல்.பி. x எம்.ஜி. சாலை (M.G Road) சந்திப்பு வரையிலான முக்கியப் பகுதி முழுவதுமாக மூடப்பட உள்ளது. இதனால், பொதுமக்களின் அத்தியாவசியப் பயணங்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நாளை முதல் பின்வருமாறு கறாரான சில போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன:

திருவான்மியூரிலிருந்து திரு.வி.க பாலம் நோக்கிச் செல்லும் அனைத்துப் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் எல்.பி. x எம்.ஜி. சாலை சந்திப்பிலிருந்து திருப்பி விடப்பட்டு, எம்.ஜி. சாலை, சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலை மற்றும் சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ வழியாக எல்.பி. சாலையை அடையுமாறு போக்குவரத்து மாற்றப்படுகிறது. இதேபோல், பெசன்ட் நகரில் இருந்து 7-வது அவென்யூ வழியாக வரும் வாகனங்கள் மகாத்மா காந்தி சாலையை அடைந்து, வலது புறம் திரும்பி, சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலை மற்றும் இடது புறம் திரும்பிச் சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ வழியாக எல்.பி. சாலையை அடையலாம்.
இதையும் படிங்க: சினிமாவிலிருந்து விடுபட்ட விஜய், இன்னும் சினிமா செயல்களிலிருந்து விடுபடவில்லை! கி.வீரமணி விமர்சனம்!
எல்.பி. சாலையிலிருந்து திருவான்மியூர் நோக்கி வரும் வாகனங்கள் சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ சாலை வழியாகச் சென்று, வலதுபுறம் திரும்பி 11-வது குறுக்குச் சாலையில் நுழைந்து, இடதுபுறம் திரும்பி 8-வது குறுக்குச் சாலையை அடைந்து, பின்பு வலதுபுறம் திரும்பி 10-வது குறுக்குச் சாலை வழியாக எம்.ஜி. சாலையை அடைந்து தங்களது இலக்குகளை நோக்கிச் செல்லலாம்.
இதுவரையில் சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலையிலிருந்து மகாத்மா காந்தி சாலை வழியாக எல்.பி. சாலை வரையிலும், சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ சாலையில் இருந்து சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலை வரை ஒருவழிப்பாதையாக (One-Way) இருந்த சாலைகள், தற்போது தற்காலிகமாக இருவழிப் பாதையாக (Two-Way) மாற்றப்படுகின்றன. அதேபோல், சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலை திரு.வி.க. பாலம் நோக்கிச் செல்லும் சாலை ஒருவழிப்பாதையாகவும், 11-வது குறுக்குச் சாலை திருவான்மியூர் நோக்கிச் செல்லும் சாலை ஒருவழிப்பாதையாகவும் மாற்றப்படுகிறது.
திருவான்மியூரிலிருந்து திரு.வி.க பாலம் நோக்கிச் செல்லும் கார்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் எல்.பி. x எம்.ஜி. சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி, இந்திரா நகர் 2-வது அவென்யூ சாலையை அடைந்து, வலது புறம் திரும்பி 1-வது பிரதான சாலை வழியாக வலது மற்றும் இடதுபுறம் திரும்பி 1-வது அவென்யூ சாலையை அடைய வேண்டும். அங்கிருந்து வலதுபுறம் திரும்பி எல்.பி. X இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பை அடைந்து, இடதுபுறம் திரும்பித் தங்களது இலக்குகளை அடையலாம். இந்திரா நகர் 2-வது அவென்யூ சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதிய உயரத்தை தொடும் இந்தியா-ஜப்பான் உறவு..!! டெல்லி வருகிறார் பிரதமர் சனாயே தகாயிச்சி..!!