புதுடில்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னத்தை முடக்கிய தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு எதிராக மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளது. கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான பிரச்னைக்கு தேர்தல் கமிஷன் இறுதி முடிவு எடுக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி மோதலை தொடர்ந்து, கட்சியின் பெயர் மற்றும் பாரம்பரியமான ‘புல்-பூ’ சின்னத்தை இரு தரப்பும் பயன்படுத்துவதற்கு தேர்தல் கமிஷன் இடைக்காலமாக தடை விதித்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து மம்தா பானர்ஜி சுப்ரீம் கோர்ட்டை நாடினார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களை கருத்தில் கொண்டு தேர்தல் கமிஷன் இந்த இடைக்கால ஏற்பாட்டை செய்துள்ளது. இதன்படி, மம்தா தலைமையிலான அணிக்கு ‘மம்தா ஆல் இந்தியா திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரும், ‘புட்பால் பிளேயர்’ சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு அணிக்கு ‘டெமோக்ரடிக் திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரும், ‘லிஃபாபா’ சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: திமுகவுக்கு வட மாநிலங்களில் ‘நோ’? உதயநிதி பேச்சால் எடுபடாமல் போனது கனிமொழியின் முயற்சி?!
இந்த நடவடிக்கைக்கு எதிராக மம்தா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டார். தேர்தல் நடைமுறை தொடங்கிய நிலையில் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை முடக்கியிருப்பது தங்கள் தரப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் வாதிட்டார். இந்த விவகாரத்தில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. தேர்தல் கமிஷனுக்கு அதன் தரப்பில் ஆதாரங்களை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கிய நீதிபதிகள், கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான இறுதி முடிவை எடுக்க நியாயமான காலக்கெடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
மேலும், இரு தரப்பினருக்கும் தங்கள் ஆதாரங்களை முன்வைக்க உரிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் இந்த விவகாரம் தேவையின்றி நீண்ட காலம் நிலுவையில் இருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதற்காக தேர்தல் கமிஷன் தனது காலக்கெடு குறித்த பதிலை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அசல் பெயர் மற்றும் ‘புல்-பூ’ சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. தேர்தல் கமிஷனின் இறுதி முடிவு எப்போது வெளியாகும் என்பதற்கு சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ள காலக்கெடு பதில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நந்திகிராமை தொடர்ந்து ரெஜிநகரிலும் மம்தா அணிக்கு அதிர்ச்சி! வேட்பாளர் திடீர் வாபஸ்! மேற்கு வங்கத்தில் பரபரப்பு!