தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைத் தங்களது சொந்தங்களுடன் கொண்டாடுவதற்காக, சென்னையிலிருந்து மக்கள் இன்று மாலை முதலே சாரை சாரையாகச் சொந்த ஊர்களுக்குப் புறப்படத் தொடங்கியுள்ளனர். இதனால் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பள்ளிகளுக்கு நாளை முதல் 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று மாலை அலுவலகம் முடிந்த கையோடு ஆயிரக்கணக்கானோர் தங்கள் பைகளைத் தூக்கிக்கொண்டு பேருந்து நிலையங்களை நோக்கிப் படையெடுத்தனர். கிளாம்பாக்கத்தில் நிலவும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பயணிகள் தடையின்றிப் பயணம் செய்யவும் போக்குவரத்துத் துறை சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக விடிய விடியப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிலவும் கடும் கூட்ட நெரிசலைச் சமாளிக்க, போக்குவரத்துத் துறை சார்பில் இன்று மட்டும் கூடுதலாக 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் எந்தவிதக் குழப்பமுமின்றிப் பேருந்துகளில் ஏறுவதற்காக, முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் மற்றும் முன்பதிவில்லா பேருந்துகள் எனத் தனித்தனி நடைமேடைகளில் (Platforms) இருந்து இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் 'ரிசர்வேஷன்' செய்த பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் தங்களது பேருந்துகளை எளிதில் கண்டறிந்து பயணத்தைத் தொடர்ந்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் நேரடி ஆய்வு! புதிய பாடத்திட்டம் எப்படி இருக்கணும்? பள்ளிக் கல்வித் துறை கருத்துக் கேட்பு கூட்டம்!
கிளாம்பாக்கத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் தலைகளாகவே தென்பட்ட நிலையில், பாதுகாப்புப் பணிக்காக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பேருந்து நிலையத்திற்கு வெளியே ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கத் போக்குவரத்துப் போலீசார் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். அதிகாலை வரை இந்தப் போக்குவரத்துத் தீவிரம் நீடிக்கும் என்பதால், பயணிகளின் வசதிக்காகக் குடிநீர் மற்றும் மருத்துவ முகாம்களும் முனையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற நம்பிக்கையுடன், பொங்கலை முன்னிட்டுத் தமிழகமே உற்சாகப் பயணத்தில் இணைந்துள்ளது.
இதையும் படிங்க: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு! பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு