இந்தியாவின் பழமையான புனித நகரமான அயோத்தியில், ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோவிலில் இன்று (செப்டம்பர் 12) மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் டாக்டர் நவீன்சந்திர ராம்கூலம் சாமி தரிசனம் செய்தார். இது அவரது எட்டு நாட்கள் நீடிக்கும் இந்திய சுற்றுப்பயணத்தின் முக்கிய அங்கமாகும். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத் தலைமையில் நடைபெற்ற இந்த தரிசன நிகழ்வு, இரு நாடுகளுக்கிடையேயான வரலாற்று ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

மொரீஷியஸ் பிரதமர் ராம்கூலம், கடந்த செப்டம்பர் 9ம் தேதி அன்று இந்தியா வந்தடைந்தார். தொடர்ந்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை விவாதித்தார். அவரது சுற்றுப்பயணத்தில் மும்பை, வாரணாசி, அயோத்தி மற்றும் திருப்பதி ஆகிய இடங்கள் அடங்கும்.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோவிலில் பூட்டான் பிரதமர்.. ஜலாபிஷேகம் செய்து வழிபாடு..!!
வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவிலை நேற்று நேரில் சென்ற வழிபட்ட ராம்கூலம், இன்று அதிகாலை அயோத்தி மகரிஷி வால்மீகி விமான நிலையத்தை அடைந்தார். அங்கு முதல்வர் யோகி ஆத்யநாத் தலைமையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அயோத்தி மாவட்ட ஆட்சியர் நிகில் திகராம் ஃபுண்டே கூறுகையில், "பிரதமருக்கு இந்திய கலாச்சாரத்தின் சிறப்பு அம்சங்களுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோவிலில் ராமரை தரிசித்து, பூஜை செய்தார். பின்னர் ராம் தர்பார், குபேர திலை சிவன் கோவில் ஆகியவற்றை பார்வையிட்டார்" என்றார். தரிசனத்திற்குப் பின், அவருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு, அயோத்தி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.
ராம்கூலம், "இந்த கோவில் அழகும், இந்தியாவின் ஆன்மீக சக்தியும் என்னை மிகுந்து பிரமிக்க வைத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் இன்னும் வலுப்படும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அயோத்தி நகரம் இந்த வருகையை முன்னிட்டு, சுத்தமான புனிதமான தோற்றத்துடன் தயார்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வு, இந்திய-மொரீஷியஸ் உறவுகளின் 'என்ஹான்ஸ்டு ஸ்ட்ராட்டெஜிக் பார்ட்னர்ஷிப்'ஐ மேலும் வலுப்படுத்துகிறது. 2025 மார்ச் மோடியின் மொரீஷியஸ் பயணத்திற்குப் பின் இது முதல் உயர்மட்ட சந்திப்பாகும். இந்த சுற்றுப்பயணம், மொரீஷியஸின் இந்து மக்களுக்கும், இந்தியாவின் ஆன்மீக முக்கியத்துவத்திற்கும் இடையேயான பிணைப்பை வலியுறுத்துகிறது. ராம்கூலத்தின் பயணம், பொருளாதார, கலாச்சார மற்றும் ஆன்மீக துறைகளில் புதிய ஒத்துழைப்புகளைத் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோவிலில் பூட்டான் பிரதமர்.. ஜலாபிஷேகம் செய்து வழிபாடு..!!