சென்னையில் மதிமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மதிமுக எடுக்கவிருக்கும் முக்கிய அரசியல் முடிவு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக இரு தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பிறகு தவெக தலைவர் ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்றதும், மதிமுக பொதுச் செயலர் வைகோவின் இல்லத்துக்கு நேரில் சென்று மரியாதை நிமித்தம் சந்தித்தார். அதன்பிறகு தவெகவுக்கு ஆதரவாக மதிமுக நிலைப்பாடு எடுத்து வந்தது.
இருப்பினும், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுகவை திமுக கட்டாயப்படுத்தியதாக வைகோ பொதுவெளியில் தெரிவித்திருந்தார். கடந்த வாரம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய வைகோ, “திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: DMK Files!! கப்பல் ஒப்பந்தத்தில் ஊழல்?! டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை மீண்டும் குறுக்கு விசாரணை!

இன்றைய கூட்டத்தில் சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் பங்கேற்கவில்லை. அவர் உயர்நிலைக் குழு உறுப்பினர் இல்லாததால் கலந்துகொள்ளவில்லை என கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்படும் என்பதால் மதிமுகவினர் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.
மதிமுக திமுக கூட்டணியில் இருந்து விலகினால், உதய சூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற இரு எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது மதிமுகவுக்குள் புதிய சிக்கலை உருவாக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
தவெக ஆட்சியின் முதல் கட்ட நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும் மதிமுக, தங்களது எதிர்கால அரசியல் பாதையை இன்று தீர்மானிக்கும் முக்கிய கட்டத்தில் உள்ளது. வைகோ தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல மூத்த தலைவர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசியலில் மதிமுகவின் அடுத்த நகர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அனைத்து தரப்பினரும் இன்றைய கூட்டத்தின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: திமுகவின் கூவலுக்கு முதல்வர் விஜய் முற்றுப்புள்ளி! பிரதமருக்கு எழுதிய கடிதத்தை கவனித்தீர்களா?