கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என். செலுவராயசாமி, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய சமநிலை நீர்த்தேக்க அணை கட்டும் திட்டத்திற்கு அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதத்திற்குள் அடிக்கல் நாட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இது கர்நாடக அரசின் உறுதியான முடிவு என்றும், தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான அனைத்து முன்னேற்பாடுகளும் நிறைவடைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மண்டியாவில் விவசாயிகளை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்த அமைச்சர், “காவிரி நீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு மேகதாது அணை கட்டுவதே. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தமிழகத்திற்கு மிகக் குறைந்த அளவிலேயே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வறட்சி மற்றும் அணைகளின் நீர்மட்டம் குறித்த விவரங்கள் நீதிமன்றத்திற்கு தொடர்ந்து தெரிவிக்கப்படுகின்றன” என்றார்.
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழகம் கோரி வரும் நிலையில், கர்நாடகா தனது குடிநீர் தேவைகளை முன்னிறுத்தி மறுத்து வருகிறது. இதனால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விசாரணையில் இருக்கும்போதே, அமைச்சர் மேகதாது திட்டத்தை முன்னெடுக்கும் உறுதியை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மேகதாது வேண்டாம்.. ராசிமணலில் அணை...! விவசாயிகளுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்..!!

மேகதாது திட்டம் ராமநகரா மாவட்டம் கனகபுரா அருகே காவிரி-அர்க்காவதி சங்கமத்தில் அமைய உள்ளது. இது பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கவும், மின் உற்பத்தி செய்யவும் உதவும் பல்லுறுப்பு திட்டமாகும். திட்டச் செலவு சுமார் ரூ.16,745 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 12,500 ஏக்கர் நிலம் தேவைப்படும் இதில், 20,000 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு ஈடாக 13 மாவட்டங்களில் மாற்று நிலம் ஒதுக்கப்படும். விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என உறுதியளித்த அமைச்சர், அவர்களது ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்பை வேண்டினார்.
மத்திய நீர்வள ஆணையத்திடம் திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். காவிரி பிரச்சினை நீண்டகாலமாக இரு மாநிலங்களுக்கிடையே நீடித்து வரும் சூழலில், மேகதாது திட்டம் இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கும் நிரந்தரத் தீர்வாக அமையும் என கர்நாடக அரசு வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க: தாய் மாமன் சீர் முதல் அண்ணன் சீர் வரை.. பெண்கள் யாரையும் சார்ந்து நிற்கக் கூடாது!! கனிமொழி எம்.பி பேச்சு..!!