டெல்டா மாவட்டங்களில் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதால்தான், நெல் கொள்முதல் விவகாரத்தை வைத்து பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் அரசியல் செய்யப் பார்க்கின்றன என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகைக்கு 29 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், டிசம்பர் 12 அன்று சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார். தகுதி இருந்தும் கிடைக்காதவர்களுக்குக் கோட்டாட்சியரிடம் மீண்டும் விண்ணப்பத்தைச் சேர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
குறுவை நெல் கொள்முதல் அக்டோபர் 1 முதல் நடைபெற்று வருவதாகவும், டெல்டா மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் நெல்லின் ஈரப்பத சதவீதத்தை அதிகரிக்கக் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "திமுக மேடைகளில் நிராகரிப்பு... வயிற்றில் அடித்தார்கள்!" வசைச் சொற்களால் மனமுடைந்தேன்: நாஞ்சில் சம்பத் கண்ணீர்!
மத்திய குழுக்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பார்வையிட்டபோதும், நெல்லின் ஈரப்பதம் 20% முதல் 25% வரை இருந்தும் அனுமதி வழங்கவில்லை என்றும், ஈரப்பதத்தை 17%லிருந்து 22% ஆக அதிகரிக்க மத்திய அமைச்சரிடம் நேரில் கடிதம் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
"2021 சட்டமன்றத் தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. அதனால்தான் நெல்லை வைத்து அரசியல் செய்யலாம் என நினைக்கின்றனர். அதற்கு எப்போதும் வாய்ப்பு இல்லை. டெல்டா மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருடன் நெருக்கமாக உள்ளனர்" என்று அமைச்சர் சக்கரபாணி அழுத்தமாகக் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மற்றும் கூட்டணியில் உள்ள அன்புமணி ஆகியோர் நெல் ஆய்வு செய்து சென்றும், மத்திய அரசிடம் அனுமதி வாங்கித் தரவில்லை என்று அவர் விமர்சித்தார்.
ஈரப்பதம் மற்றும் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது என்றும், இது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயல் என்றும் அவர் குற்றம் சாட்டினார். விவசாயிகளுக்குத் தனி பட்ஜெட் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20,000 இழப்பீடு தருவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் 2014-இல் தீர்ப்பு வழங்கியது அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் என்றும், அப்படியென்றால் அந்தத் தீர்ப்புக்கு அதிமுக உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், ஆனால் அவர்கள் அதைப்பற்றி பேச மறுக்கிறார்கள் என்று சாடினார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சமூகநீதி மற்றும் சமத்துவத்தைக் காக்கும் மாநிலம் என்றும், இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இருமுறை பதிவானவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் நீக்கப்பட்டு, புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும், வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தாலும் டிசம்பர் 14 வரைவுப் பட்டியல் வெளிவந்த பின், படிவம் 6 (Form 6) மூலம் மீண்டும் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீப விவகாரம் "சிறுபான்மையினரை தாஜா செய்யும் திமுக" அண்ணாமலை ஆவேசம்!